நாமக்கல் அரங்கநாதர் திருக்கோவிலில் சொர்கவாசல் திறப்பு ! -ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலையிலேயே நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்!
பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
நாமக்கல் மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஒரே கல்லினால் உருவான சாளக்கிராம மலையில் கிழக்கு பகுதியில் கி.பி 8-ம் நூற்றாண்டில் அதியேந்திர குணசீலன் என்ற மன்னரால் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோவில் மலையைக் குடைந்து, குடவரைக் கோவிலாக அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில் கார்க்கோடகன் என்னும் பாம்பின்மீது அனந்த சயன நிலையில் ஸ்ரீ அரங்கநாதர் சுவாமி பக்த்களுக்கு காட்சியளிக்கிறார்.வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை 4.30 மணியளவில் இக்கோவிலில் சொர்க்கவாசல் என்னும் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதிகாலை 4.30 மணிக்கு கோவிலில் சொர்க்க வாசல் கதவுகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து திருக்கோவில் பட்டாச்சாரியார்கள் சொர்க்கவாசல் கதவுகளை திறந்து வைத்தனர். அவ்வாசல் வழியாக சென்று ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக குடவரை கோவிலின் அடிவாரத்தில் இருந்து தட்டிகள் அமைக்கப்பட்டு முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளது.பாதுகாப்பு பணிக்காக சுமார் 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.