நாகை சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

Update: 2025-01-10 09:11 GMT
நாகை சௌந்தரராஜ பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. 108 திவ்ய தேசங்களில் 19-வது தேசமாக விளங்குவது சௌந்தரராஜ பெருமாள் கோவில். இங்கு ஏகாதசி திருவிழா கடந்த 11 நாள்களாக நடைபெற்று வருகிறது. பகல் பத்து உற்சவத்தையொட்டி தினமும் பெருமாள் பல்வேறு அலங்காரத்தில் புறப்பாடு நடைபெற்றது. நேற்று முன்தினம் மோகினி அலஙகாரத்தில் பெருமாள் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்க வாசல் எனும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நேற்று காலை சுமார் 4.30 மணி அளவில் நடைபெற்றது. சிறப்பு வழிபாடுகளுக்கு பின்னர், சௌந்தரராஜ பெருமாள் பரமபதவாசல் எனும் சொர்க்கவாசல் வழியே புறப்பாடாகினார். அப்போது, பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று கோஷம் எழுப்பி பெருமாளை பின்தொடர்ந்து, சொர்க்க வாசல் வழியே வெளியே வந்து வழிபட்டனர். இதேபோல் நவநீத கிருஷ்ணன் கோவில், வெளிப்பாளையம் வரதராஜ பெருமாள் கோவில், ஆபரணதாரி அனந்த நாராயண பெருமாள் கோவில், பாப்பா கோவில் கஸ்தூரி ரங்கநாத பெருமாள் கோவில், திருக்கண்ணங்குடி லோகநாதப் பெருமாள் கோவில், நாகூர் பிரசன்னா வெங்கடாஜலபதி கோவில் உள்ளிட்ட கோவில்களில், சொர்க்க வாசல் திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News