சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து முன்னாள் எம்எல்ஏ ஞானசேகரனை விடுவித்த உத்தரவு ரத்து
வேலூர் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ ஞானசேகரன், அவரது மனைவியை சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுவித்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
வேலூர் தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ-வான ஞானசேகரன், 2006-2011 காலகட்டத்தில் எம்எல்ஏ-வாகப் பதவி வகித்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.3.15 கோடி சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக அவர் மீதும், அவரது மனைவி மேகலா மீதும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த வேலூர் சிறப்பு நீதிமன்றம், குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி இருவரையும் விடுவித்து 2016-ல் உத்தரவிட்டது. இதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பி.வேல்முருகன் முன்னிலையில் நடைபெற்றது. "முன்னாள் எம்எல்ஏ ஞானசேகரன் மற்றும் அவரது மனைவி மேகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், குற்றச்சாட்டுகளுக்கு போதிய முகாந்திரம் உள்ளது. அவர்கள் இருவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை சேர்த்துள்ளனரா, இல்லையா என்பது கீழமை நீதிமன்ற விசாரணையின் முடிவில்தான் தெரியவரும். எனவே, அவர்கள் இருவரையும் வழக்கில் இருந்து விடுவித்து வேலூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறேன். இந்த வழக்கை சம்பந்தப்பட்ட நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.