ஆளுநரின் செயலில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது - பேரவையில் முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பதிலுரை அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், “ஆளுநரின் செயலில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது” என்று குற்றஞ்சாட்டினார்.
தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் ஜனவரி 6-ம் தேதி தொடங்கியது. அலுவல் ஆய்வுக்குழு முடிவின்படி, ஜனவரி 9 ஆம் தேதி முதல் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று (10-ம் தேதி) வரை விவாதம் நடைபெற்றது. இறுதி நாளான இன்று, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பதிலுரை அளித்தார். அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், ஆளுநரின் செயலில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது. அரசு தயாரித்துத் தரும் உரையை வாசிக்க வேண்டிய கடமை ஆளுநருக்கு உள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்தை அரசியல் உள்நோக்கத்தோடு அவமதிப்பதும் ஆளுநருக்கு இழுக்கு. திட்டமிட்டு ஆளுநர் விதிமீறலில் ஈடுபடுகிறார் என்று ஆளுநர் மீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார். அதேபோல் மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காமல் வஞ்சிப்பதாகவும் குற்றஞ்சாட்டினார். ஆளுநரின் செயலில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகக் குற்றஞ்சாட்டியதோடு திமுக அரசு ஏன் விடியல் அரசாக இருக்கிறது என்று விவரித்தார். விடியல் பயண திட்டம், மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், காலை உணவுத் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம் போன்றவற்றை சுட்டிக் காட்டி இவற்றையெல்லாம் அனுபவிக்கும் மக்கள் தான் விடியல் அரசின் சாட்சி என்றார். அவர்களுக்காகத் தான் விடியல் அரசே தவிர இருளில் இருக்கும் எதிர்க்கட்சிகளுகாக அல்ல என்றார். எதிர்க்கட்சிகள் எழுப்பும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் பற்றியும் முதல்வர் ஸ்டாலின் பேசினார். சட்டம், ஒழுங்கு மாநிலத்தில் சீராக இருப்பதாகக் கூறினார். 3 ஆண்டுகளில் மக்கள் நலனுக்காக 12 ஆயிரம் கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளதாக முதல்வர் பெருமிதம் தெரிவித்தார். அதே வேளையில் இன்னும் வரும் கோரிக்கைகளை நிறைவேற்றும் கருணை இருந்தாலும் அதற்கான நிதி இல்லை என்று மாநில நிதி நிலைமை பற்றியும் பேசினார். சட்டப்பேரவையின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவினர் கருப்பு சட்டைப் போராட்டத்தையும் விமர்சித்துப் பேசினார். “தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசை, புதிய கல்விக் கொள்கை, யுஜிசி விதிகள் திருத்தத்தால் கல்வியை சிதைக்கும் மத்திய அரசைக் கண்டித்து, சட்டப்பேரவையின் மாண்பை சிதைத்த ஆளுநரை எதிர்த்டு கருப்புச் சட்டை போராட்டம் நடத்தியிருந்தால் பாராட்டி, வரவேற்றிருப்பேன், அதைவிடுத்து இவர்கள் கருப்புச் சட்டை போராட்டம் நடத்திய காரணம் சிரிப்பு வரவழைக்கிறது.” என்றார். “டங்க்ஸ்டன் திட்டம் தமிழகத்தில் வராது. மீறி வந்தால் நான் முதல்வர் பதவியிலேயே இருக்க மாட்டேன் என்று ஏற்கெனவே சட்டப்பேரவையில் கூறியிருந்தேன். அதையும் மீறி சிலர் இதில் அரசியல் செய்து குளிர் காய நினைக்கிறார்கள்.” என்றார்.