ஸ்ரீரங்கம்: இராப்பத்து 2ம் திருநாள் பகல் சிறப்பு புறப்பாடு
நம்பெருமாள் - வெள்ளை நிற வஸ்திரம் அணிந்து நீண்ட சௌரிக் கொண்டை சாற்றி பக்தர்களுக்கு காட்சி
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பகல் பத்து உற்சவம் நிறைவடைந்ததை அடுத்து, ராப்பத்து உற்சவம் தொடங்கியது. முதல் நாளான நேற்று அதிகாலை 4.15 மணியளவில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்ட நம்பெருமாள் 5.15 மணியளவில் பரமபத வாசல் என்னும் சொர்க்க வாசல் வழியாக நுழைந்து ஆயிரங்கால் மண்டபம் முன்பாக மணல் வெளியில் எழுந்தருளினார். இரண்டாம் நாளான இன்று நண்பகல் 12 மணியளவில், நம்பெருமாள் மூலஸ்தனத்தில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 1 மணியளவில் பரமபத வாசலைக் கடந்த ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.. தொடர்ந்து ராப்பத்து உற்சவத்தின் 7ஆம் நாளில் திருக்கைத்தல சேவை 8ஆம் நாளில் திருமங்கை மன்னரின் வேடுபறி (வழிப்பறி) நிகழ்ச்சி நடைபெறும். ராப்பத்து உற்சவ நிகழ்ச்சியின் ஒவ்வொரு நாளும், ஆயிரங்கால் மண்டபத்தில் நம்பெருமாள் முன்பு, ஆழ்வார்கள் அருளிய நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் திருவாய் மொழி பாசுரங்களை அரையர்கள் அபிநயத்துடன் இசைக்கின்றனர். அப்போது மூலவரான நம்பெருமாளை முத்தங்கி சேவையில் பக்தர்கள் தரிசிக்கலாம்.