பணம் பறிமுதல்
ஈரோடு கிழக்கு தொகுதியில் இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.3.30 லட்சம் பறிமுதல் பறக்கும் படை -கண்காணிப்பு குழுவினர் நடவடிக்கை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படை, கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் ரூ.1 லட்சம் பணம் இருந்தது. சங்கதிரியை அரசு ஒப்பந்ததாரர் சரவணன் என்பவர் அந்த பணத்தை பொள்ளாச்சிக்கு எடுத்து சென்றது தெரியவந்தது. எனினும் அந்த பணத்திற்குரிய ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் பறக்கும் படையினர் ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்து ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து நேற்று ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டான பகுதியில் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் ரூ.1.80 லட்சம் பணம் இருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து காரில் வந்தவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த லேத் பட்டறை உரிமையாளர் மதன் (55) என்பதும் ஈரோட்டில் நிலம் வாங்குவது தொடர்பாக பணம் கொண்டு வந்ததும் தெரிய வந்தது. எனினும் அவர் கொண்டு வந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் ரூ.1.80 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். இதே ஈரோடு மரப்பாளையம் பகுதியில் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு பெண் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரை நிறுத்தி சோதனை செய்தபோது அந்தப் பெண்ணிடம் 50 ஆயிரத்து 860 ரூபாய் இருந்தது தெரிய வந்தது. விசாரணையில் அந்தப் பெண் ஈரோடு கல்லு கடை பகுதியைச் சேர்ந்த நிர்மலா என தெரிய வந்தது. ஆனால் பணத்திற்குரிய ஆவணங்கள் இல்லாததால் அந்தப் பணத்தை கைப்பற்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவினர் ஈரோடு மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையிலுள்ள அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த பணம் தேர்தல் நடத்தும் அதிகாரியும் மாநகராட்சி ஆணையாளருமான மனிஷ் உத்தரவின் பெயரில் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதியில் இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.3.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.