வீடு இடிப்பு: மாநகராட்சி அதிகாரிகள் மீது ராணுவ வீரரின் மனைவி புகார்
தூத்துக்குடியில் வீட்டை இடித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராணுவ வீரரின் மனைவி மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடியில் வீட்டை இடித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராணுவ வீரரின் மனைவி மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அமுதா நகர் 1-வதுதெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி பத்திரகாளி (46) என்பவர் மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனு: நான் மேலே கண்ட முகவரியில் குடியிருந்து வருகிறேன். எனது கணவர் சுப்பிரமணியன் ராணுவத்தில் பணியாற்றி 3-வருடங்களுக்கு முன்னர் நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்து விட்டார்கள். எனக்கு குழந்தை கிடையாது நான் தனியாக இருக்கிறேன். எனது கணவர் இறந்ததால் அரசால் கிடைத்த பணத்திலிருந்து 19-லட்சத்தில் 2022- வருடம் மார்ச் தேதி தூத்துக்குடி மேலூர் சார்க்பதிவகத்தில் மீளவிட்டான் கிராம (பகுதி 2) சர்வே 768/1 நம்பரில் அரசு அலுவலர்கள் கூட்டுறவு வசதி காலணி III-ல் பிளாட்டுகளாக பிரித்திருப்பதில் பிளாட் நம்பர் 55A மனைக்கு மால் செண்ட் 294 என்ற வீட்டை பத்திர பதிவு செய்து அதில் நான் தனியாக குடியிருந்து வருகிறேன். இப்போது மழை காலம் என்பதால் நான் வாங்கிய வீடு பழைய ஆஸ்பெஸ்டாஸ் வீடு என்பதாலும் மழையில் ஒழுகியதாலும் அருகில் அடுத்த தெருவில் உள்ள அக்கா வீட்டில் இருந்து வருகிறேன். எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் போன மாதம் 22-11-2024-ம் தேதி எனது அக்கா வீட்டிற்கு திருநெல்வேலி சென்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தேன். இதற்கிடையே 22-11-2024 அன்று நான் வாங்கிய இடத்தில் உள்ள வீடு மற்றும் காம்பவுண்ட்சுவர் குடிநீர் இணைப்பு மின் இணைப்பு ஆகியவற்றை மாநகராட்சி அதிகாரிகள் என்று கூறி அத்துமீறி எனக்கு எந்தவித தகவலும் நோட்டிஸ் எதுவும் கொடுக்காமல் ஜேசிபி மூலம் இடித்து விட்டார்கள். நான் ஒரு ராணுவ வீரர் மனைவி என்றும் குழந்தைகள் இல்லாத வெறும் விதவை என்று கூட பாராமல் எனது வீட்டை நொறுக்கிவிட்டார்கள். பின்னர் இது அருகில் உள்ள நபர்கள் சொல்லி நான் திருநெல்வேலியிலிருந்து எனது இடத்தை பார்த்தவுடன் எனக்கு மயக்கமே வந்துவிட்டது. உடனே வழக்கறிஞர் மூலம் அனைத்தையும் கூறி உதவி கோரினேன். அவர் சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வதாக கூறினார்கள். இந்த நிலையில் மீண்டும் 29-11-2024-ல் வெள்ளி கிழமை அன்றும் மாநகராட்சி AE என்று கூறி JCB - வைத்து மீண்டும் அந்த இடத்தை சீர்செய்வதாக கூறி அந்த இடத்தை வீட்டை இடித்து தரைமட்டமாக்கிவிட்டார்கள். இளம் விதவையான என்னை மேலும் மேலும் தூத்துக்குடி மாநகராட்சியின் ஊழியர்கள் மன உளைச்சலுக்கு கொண்டு செல்கிறார்கள். தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவு எடுத்தேன். கடவுள் இருக்கிறார் நம்மை காப்பாற்றுவார் என்று நம்மை பாதுகாப்பார் என்று முடிவு எடுத்து அன்று 29-11-2024வெள்ளிக்கிழமை தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தேன். அவர்களும் எனக்கு மனு ரசீது கொடுத்து உங்களை யார் ஏமாற்றுகிறார்களோ அவர்களை விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள். இந்த நிலையில் 01-12-2024அன்று ஞாயிற்று கிழமை மீண்டும் மாநகராட்சி ஊழியர்கள் AE என்று கூறி எனது இடத்தில் அத்துமீறி ரேஷன் கடை கட்டப் போகிறோம். கமிஷனர் உத்திரவு என்று கூறியும், உன்னால் ஒன்னும் செய்ய முடியாது என மரியாதையாக போய்விடு என்று மிரட்டி இடத்தை அளந்து வேலை ஆரம்பிக்க நினைத்தார்கள். நான் என்னிடம் பத்திரம் தீர்வை கட்டிய மின்சார கட்டணம், குடிநீர் இணைப்பு ஆகிய எல்லா ரசீதுகளும் என்னிடம் உள்ளது. நீங்கள் எதை வைத்து ரேஷன் கடை கட்டப்போகிறீர்கள் அரசு இடம் என்றால் அத்தாட்சியை காண்பிங்கள் என்றேன். உன்னிடம் காண்பிக்க முடியாது நீ ஒரு அனாதை என்று மிரட்டினார்கள். அதன்பின் காவல்துறையினர் விசயம் கேள்விப்பட்டு வந்து யார் இடம் என்று கேட்டு பத்திரம் மற்றும் அனைத்து ஆதாரங்களையும் காண்பித்த பிறகுதான் எந்த வேலையும் வேண்டாம் என்று கூறியதால் அவர்கள் சென்றுவிட்டார்கள். எனவே எனக்கு பாத்தியப்பட்ட வீட்டை இடித்து தள்ளிய மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து இளம் விதவையான என்னை வாழவைக்க எனது இடத்தை மீட்டு தரும்படி மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.