பொங்கல் பூஜை பொருட்கள் வாங்குவதற்கு சேலம் கடைவீதியில் அலைமோதிய கூட்டம்

கரும்பு, மஞ்சள் குலை விற்பனை மும்முரமாக நடந்தது.

Update: 2025-01-14 02:11 GMT
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சேலம் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கடந்த 2 நாட்களாக பொங்கல் பூஜை பொருட்கள் வாங்குவதற்காக சேலம் கடைவீதியில் குவிந்த வண்ணமாக இருந்தனர். இதன் காரணமாக சேலத்தில் பொங்கல் பொருட்கள் விற்பனை மும்முரமாக நடந்தது. சேலம் பழைய பஸ்நிலையம், சூரமங்கலம், குரங்குச்சாவடி, அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி, பால் மார்க்கெட், கடைவீதி, செவ்வாய்பேட்டை, அம்மாப்பேட்டை, நெத்திமேடு, கொண்டலாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கரும்பு, மஞ்சள் குலை விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டு இருந்தன. அவற்றை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். ஒரு ஜோடி கரும்பு ரூ.100 முதல் ரூ.130 வரைக்கும், மஞ்சள் குலை ரூ.50 முதல் ரூ.60 வரைக்கும் விற்பனையானது. சேலம் கடைவீதியில் நேற்று பொங்கல் பூஜை பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. கடைவீதி, முதல்அக்ரஹாரம், 2-வது அக்ரஹாரம், சின்னக்கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் வாழைப்பழம், மஞ்சள் குலை, காப்புக்கட்டு பூ, மாலை உள்ளிட்ட பொருட்களை பொதுமக்கள் வாங்கியதால் விற்பனை மும்முரமாக நடந்தது. இதுதவிர, பொங்கல் படையலுக்கு தேவையான பச்சரிசி, தேங்காய், வாழைப்பழம், பூசணிக்காய், அவரை உள்ளிட்ட காய்கறிகளை வாங்குவதற்காக பொதுமக்கள் ஆற்றோர காய்கறி மார்க்கெட்டிற்கு திரண்டனர். இதனால் அங்கு காய்கறிகள் விற்பனை மும்முரமாக நடந்தது. சேலம் கடைவீதியில் நேற்று காலை முதல் இரவு வரையிலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனிடையே, வீடுகளில் பொங்கல் வைப்பதற்கு தேவையான பொங்கல் பானை, அரிசி, வெல்லம், ஏலக்காய், முந்திரி, திராட்சை மற்றும் பனங்கிழங்கு ஆகிவற்றையும் பொதுமக்கள் வாங்கி சென்றனர். இதனால் கடைகளில் நேற்று பொங்கல் விற்பனை மும்முரமாக நடந்தது. மேலும், பெண்கள் வீட்டு வாசலில் கோலம் போடுவதற்காக கலர் கோலப்பொடிகளையும் வாங்கி சென்றனர். கடைவீதியில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக இருந்ததால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Similar News