சேலத்தில் உடலில் விஷ ஊசி போட்டு தர்மபுரியை சேர்ந்த மருத்துவ உதவியாளர் தற்கொலை

போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Update: 2025-01-14 02:19 GMT
தர்மபுரி மாவட்டம் புலிக்கரையை அடுத்த மோட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 27). இவரது மனைவி ஆசாராணி (25). இவர்கள் இருவரும் நர்சிங் கல்லூரியில் படித்த போது காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஆசாராணி தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். அதேபோல், லோகநாதனும், அவரது தம்பி பூவரசனும் சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் மருத்துவ உதவியாளர்களாக பணியாற்றி வந்தனர். இவர்கள் இருவரும் அழகாபுரம் தோப்புக்காடு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வேலைக்கு சென்று வந்தனர். நேற்று முன்தினம் லோகநாதன் வீட்டில் மயங்கி கிடந்தார். அப்போது, வேலை முடித்து வீட்டிற்கு வந்த அவரது தம்பி பூவரசன், படுக்கை அறையில் கிடந்த அண்ணனை எழுப்பியும் அவர் எழுந்திருக்கவில்லை. இதனால் அவரை சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அப்போது லோகநாதனை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அழகாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில், லோகநாதன், தனது உடலில் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. மது அருந்தும் பழக்கமும் அவருக்கு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாகவும் தெரிகிறது. இதனால் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு அவருக்கு என்ன பிரச்சினை ஏற்பட்டது? குடும்ப பிரச்சினை காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News