சேலம் கலெக்டர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா
அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் அமைச்சர் ராஜேந்திரன் தலைமை தாங்கி குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். கலெக்டர் பிருந்தாதேவி, டி.எம்.செல்வகணபதி எம்.பி., மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவையொட்டி, கலெக்டர் அலுவலகத்தில் வாழை, கரும்பு, மஞ்சள் தோரணங்கள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டு இருந்தன. தப்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவையொட்டி உறியடி, கயிறு இழுத்தல் போட்டிகள் நடைபெற்றன. பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன. இதில் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் நேபாளம், இங்கிலாந்து, ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த பொதுமக்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் கலந்து கொண்ட வெளிநாட்டு பயணிகள் மாட்டு வண்டியில் ஏறி கலெக்டர் அலுவலகத்தை சுற்றி வந்தனர்.