மேலூர் அருகே பழி பழியாக கொலை.
மதுரை மேலூர் அருகே பழி பழியாக கொலை நடந்துள்ளது. கொலையாளிகள் தப்பி ஓட்டம்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே தெற்கு தெருவில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடை பெற்ற கொலைக்கு, பழிக்கு பழியாக மற்றொரு கொலை அரங்கேறியது. மேலூர் தெற்குதெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் விவேக்(25). இவர் டி. வெள்ளாளப்பட்டி ரோட்டில் உள்ள அவரது ஆட்டு கொட்டகையில், கடந்த நவ. 16ம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். முன்விரோதம் காரணமாக நடைபெற்ற இக்கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த கீரிசுந்தரம்(58) மற்றும் அவரது மகன்கள் ஈடுபட்டது தெரியவர அவர்களை மேலூர் போலீசார் அப்போதே கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கீரிசுந்தரம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஜாமினில் வெளியில் வந்தார். இவரை பழிக்குப் பழியாக நேற்று முன்தினம் (ஜன.13) நள்ளிரவில் அவரது வீட்டிற்குள் நுழைந்து கொலையான விவேக்கின் தம்பி சீமான் மற்றும் அவரது இரு நண்பர்கள் சேர்ந்து வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மேலூர் டிஎஸ்பி சிவகுமார், இன்ஸ்பெக்டர் சிவசக்தி தலைமையிலான போலீசார் கொலை செய்து விட்டு தப்பியவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.