விருத்தாசலத்தில் திருவள்ளுவர் நாள் விழா
திருமுதுகுன்றம் திருவள்ளுவர் அறக்கட்டளை சார்பில் நடந்தது
திருமுதுகுன்றம் திருவள்ளுவர் அறக்கட்டளை சார்பில் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் திருவள்ளுவர் நாள் விழா நடந்தது. தலைமையாசிரியர் வீரபாண்டியன் தலைமை தாங்கினார். திருமுதுகுன்றம் திருவள்ளுவர் அறக்கட்டளை செயலாளர் நல்லாசிரியர் சிறுத்தொண்ட நாயனார், தலைவர் பூமலை ஆசைதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக அறங்காவலர் கார்த்திகை ராஜா வரவேற்றார். திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் குப்பன், தலைமையாசிரியர்கள் வினோத்குமார், டேவிட் லாசர், முன்னாள் தொடக்க கல்வி அலுவலர் தங்கவேலு, எழுத்தாளர் ரத்தின புகழேந்தி, மணிமுத்தாறு பாதுகாப்பு மற்றும் பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் வக்கீல் தனவேல் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். முன்னாள் காப்பாளர் பெரியதம்பி தீர்மானங்களை வாசித்தார். தலைவர் சிவப்பிரகாச சுவாமிகள் கலந்து கொண்டு பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக பழமலை, பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். திருக்குறள் வாசித்த மாணவர்களுக்கு நகர் மன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ் பரிசுகளை வழங்கி பாராட்டினார். முடிவில் பட்டதாரி ஆசிரியர் சீராளன் நன்றி கூறினார். இதில் விருத்தாசலம் நகரத்தில் முக்கியமான சாலை சந்திப்பு இடங்கள் ஏதேனும் ஒன்றில் திருவள்ளுவர் சிலை அமைக்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பாடத்திட்டத்துடன் திருக்குறளை தனி பாடப்பிரிவாக அமைக்க வேண்டும். விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிப்பதுடன் விருத்தாசலம் என்ற வடசொல்லை நீக்கி திருமுதுகுன்றம் என பெயர் மாற்றம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.