கோவை: மாடுகளுக்கான அணிகலன்கள் விற்பனை ஜோர் !
மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்ட வரும் நிலையில் மாடுகளுக்கான அணிகலன் விற்பனை ஜோராக நடைபெறுகிறது.
கால்நடைகள் வளர்ப்போர் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையிலும், மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம் கோவையில் விமரிசையாக நடைபெற்று வருகிறது. நேற்று, கடைகள் நிறைய கால்நடைகளை அலங்கரிக்க பயன்படும் அணிகலன்களால் நிரம்பி வழிந்தன. கோவை மாவட்டத்தில் 1.5 லட்சத்துக்கும் அதிகமான கால்நடை விவசாயிகள் இருந்தாலும், விளைநிலங்கள் குறைவு, தீவன பற்றாக்குறை மற்றும் விலை உயர்வு போன்ற காரணங்களால் அவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால், ஒரு காலத்தில் 10 கறவை மாடுகள் வளர்த்த விவசாயிகள் இன்று 5-க்கும் குறைவாகவே மாடுகளை வளர்க்கின்றனர். இருப்பினும், மாட்டுப்பொங்கல் நாளில் மாடுகளுக்கு அலங்காரம் செய்வது என்பது பாரம்பரியமாக இருப்பதால், நேற்று கடைகளில் மாட்டுக்கு கழுத்து கயிறு, மூக்கணாங்கு கயிறு, திருஷ்டிக்கான கருப்பு கயிறு, ஒலி எழுப்பும் மணி வகைகள் உள்ளிட்ட பல வண்ண அணிகலன்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. டவுன்ஹால், பெரிய கடை வீதி போன்ற இடங்களில் இந்த அணிகலன்கள் ஜோடி ரூ.50 முதல், கழுத்து மணி ரூ.45 முதல் ரூ.250 வரை, சலங்கை வகைகள் ரூ.30 முதல் கிடைத்தன. பெரிய கடை வீதி வியாபாரிகள் கூறுகையில், ரேக்ளா மாடுகள், சாதாரண மாடுகள் என தனித்தனி வகையான அணிகலன்கள் விற்பனைக்கு வந்துள்ளன. புதிய வகை மாராப்பு கயிறு, மணி, சங்குகள் பொருத்திய கழுத்து பெல்ட் போன்றவை நல்ல வரவேற்பை பெற்றுள்ளன என்றனர்.