ஆற்காடு அருகே பேருந்து உரசி பெண்ணின் கை விரல்கள் துண்டு!
பேருந்து உரசி பெண்ணின் கை விரல்கள் துண்டு- போலீஸ் விசாரணை;
ஆற்காட்டில் இருந்து காஞ்சீபுரம் நோக்கி சென்ற அரசு பஸ்சில் காவனூரை சேர்ந்த தனலட்சுமி (வயது 25) என்ற பெண் கைக்குழந்தையுடன் பயணம் செய்துள்ளார். டிரைவருக்கு பின்னால் உள்ள சீட்டில் அமர்ந்திருந்த அவர், ஜன்னல் கம்பியை கைகளால் பிடித்தவாறு பயணித்துள்ளார். எம்.பி.டி. சாலையில் வாலாஜாபேட்டை அறிஞர் அண்ணா மகளிர் கலைக்கல்லூரி அருகே வந்தபோது, எதிரே வந்த அடையாளம் தெரியாத மற்றொரு வாகனம் பஸ்சின் பக்கவாட்டில் உரசியது. இதில் ஜன்னல் கம்பியை பிடித்திருந்த தனலட்சுமியின் மூன்று கைவிரல்கள் துண்டானது. இதனால் வலி தாங்க முடியாமல் துடித்துள்ளார். உடனடியாக அவருக்கு வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப் பட்டு, துண்டான கை விரல்களுடன் மேல் சிகிச்சைக்காக ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் வாலாஜாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.