யானையால் பரபரப்பு

சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதியில் நெடுஞ்சாலையில் வந்த லாரிகளை வழிமறித்து கரும்பை தேடிய யானையால் பரபரப்பு;

Update: 2025-01-21 06:08 GMT
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழ்நாடு -கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் -மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. தாளவாடி மலைப்பகுதியில் உள்ள மலை கிராமங்களில் விளையும் கரும்புகள் வெட்டி லாரிகளில் பாரம் ஏற்றி சத்தியமங்கலம் -மைசூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக சர்க்கரை ஆலைக்கும், வெல்லம் மற்றும் கரும்பு சர்க்கரை தயாரிக்கும் ஆலைக்கும், கரும்பு சாறு விற்பனை செய்யும் கடைகளுக்கும் கொண்டு செல்லப்படுகிறது. அவ்வாறு கொண்டு செல்லும்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் கரும்பு பாரம் ஏற்றிய லாரிகளை வழிமறித்து கரும்பு துண்டுகளை பறித்து தின்றது வாடிக்கையாக உள்ளது. இதை தடுக்க கரும்பு பாரம் ஏற்றிய லாரிகள் பாரத்தின் மீது தார்ப்பாய் போர்த்திக் கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை சத்தியமங்கலம் -மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே சாலை நடுவே நடமாடியபடி சரக்கு லாரிகளை வழிமறித்து கரும்பு உள்ளதா? என தும்பிக்கையால் தேடிப் பார்த்தது. இதனால் சாலையில் சென்ற வாகன ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் அச்சமடைந்தனர். சிறிது நேரம் சாலையில் நடமாடிய காட்டு யானை பின்னர் மெதுவாக அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது. இதைத் தொடர்ந்து வாகனங்கள் புறப்பட்டு சென்றன. சாலையில் நடமாடும் காட்டு யானையின் அருகே செல்லக் கூடாது. வாகனங்களில் காற்று ஒலிப்பான்களை உபயோகப்படுத்தக் கூடாது என வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.

Similar News