ஆக்கிரமிப்பு அகற்றியதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட கிராமத்தினர்
வருவாய் துறையினரை கண்டித்து, உத்திரமேரூர் -- மானாம்பதி மாநில நெடுஞ்சாலையில், மதியம் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகா அம்மையப்பநல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் தனபாக்கியம், 45. இவர், அதே கிராமத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான புல எண்: 151 மேய்க்கால் புறம்போக்கு இடத்தில் குடிசை வீடு கட்டி இருந்தார். இதை அறிந்த வருவாய் துறையினர், வருவாய் ஆய்வாளர் வினோத்குமார் தலைமையில், மதியம் 2:00 மணிக்கு ஆக்கிரமிப்பை அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆக்கிரமிப்பாளரின் உறவினர்கள் மற்றும் பகுதிவாசிகள், வருவாய் துறையினரை கண்டித்து, உத்திரமேரூர் -- மானாம்பதி மாநில நெடுஞ்சாலையில், மதியம் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த, உத்திரமேரூர் போலீசார் பேச்சு நடத்தினர். இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.