இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் திட்டக்குடி வட்டக் கிளை சார்பில் கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு
ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிக்கை;
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திட்டக்குடி வட்டதுணை செயலாளர் பாண்டியன் தலைமையில் விருத்தாசலம் கோட்டாட்சியர் சையத் மெக்மூத் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம் கொரக்கவாடி ஊராட்சியில் அரசு பள்ளிக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை சட்டவிரோதமாக உட்பிரிவு செய்து சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். தனிநபர் சிலர் உட்பிரிவு செய்து மாற்றி உள்ளதாக தெரிகிறது. இந்த உட்பிரிவு செய்ததை ரத்து செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி மொத்த இடத்தையும் முழுமையாக பள்ளிக்கு வழங்கிட வேண்டும். எம்.ஜி.ஆர்.நகரில் நிழற்கூடம் அமைப்பதற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பு அகற்றிட வேண்டும். வெள்ளாற்றில் சட்டவிரோதமாக தனிநபர் வெட்டியுள்ள கிணற்றை பொதுமக்களின் குடிநீர் பற்றாக்குறை போக்கிட பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அரசு உயர்நிலை பள்ளி பின்புறம் வடகராம்பூண்டி ஏரிக்கு தண்ணீர் செல்லும் வாய்க்காலை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து பாதையாக பயன்படுத்தி வருவதை தடுத்து நிறுத்த வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து அம்மனுவில் கூறப்பட்டிருந்தது. தொடர்ந்து மனுவை பெற்றுக் கொண்ட கோட்டாட்சியர் சையத் மெக்மூத் நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் அவர்கள் மனு அளித்துவிட்டு சென்றனர். மாவட்ட தலைவர் சின்னதம்பி மாவட்ட துணை தலைவர் பரமசிவம், திட்டக்குடி வட்ட துணை தலைவர் சண்முகம், சுதாகர், வீரபாண்டியன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.