மின்சார வாகனங்களை வாங்கி மோசடி செய்த ராஜஸ்தான் நபர் கைது
சீர்காழியில் பிரபல பேட்டரி கார்,பைக் இறக்குமதியாளரிடமிருந்து வாகனங்களை வாங்கி கொண்டு ரூ.62 லட்சம் பணத்தை தராமல் நம்பிக்கை மோசடி செய்து ஏமாற்றிய ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் சகோதரர்கள் மீது வழக்குப்பதிவு செய்து ராஜஸ்தானிலிருந்து ஒருவரை கைது செய்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசார்;
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதபுரம் மெயின் ரோட்டில் கேகேஎல் மரைன் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தை நடத்தி வருபவர் சண்முகம். எலக்ட்ரானிக் பேட்டரிகார், பேட்டரி பைக் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து இந்தியா முழுவதும் விற்பனை செய்து வருகிறார். கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரைச் சேர்ந்த அல் டெக்ஸ் யுனோவேசன் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு ரூ. 1 கோடியே 79 லட்சத்து 68 ஆயிரம் மதிப்புடைய 450 எலக்ட்ரானிக் ஸ்கூட்டர் விற்பனை செய்துள்ளனர். நிறுவன உரிமையாளர் மகேந்திர யாதவ் மற்றும் அவரது சகோதரர் மார்கெட்டிங் மற்றும் நிர்வாக மேலாளர் பிரவீன் யாதவ் ஆகியோர் வாகனங்களை வாங்கி வணிகம் செய்த வகையில் 1 கோடியே 17 லட்சம் பணத்தை கொடுத்துள்ளனர். மீதித்தொகை சுமார் ரூ. 62 லட்சம் பணம் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர். ஆனால் நிறுவனத்தைச் சேர்ந்த மகேந்திர யாதவ் அவரது சகோதரர் பிரவீன் யாதவ் ஆகியோர் வணிகம் செய்தது தொடர்பாக சண்முகத்திற்கு பணத்தை தரவில்லை. இதுகுறித்து சண்முகம் கடந்த 25.1.2022 அன்று சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை மயிலாடுதுறை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. போலீசார் விசாரணையில், பணத்தை தராமல் ராஜஸ்தான் சகோதரர்கள் நம்பிக்கை மோசடி செய்தது தெரியவந்தது. இதனையடுத்து மாவட்ட எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில் டிஎஸ்பி ராஜேந்திரன் வழிகாட்டுதலின் பேரில் இன்ஸ்பெக்டர் அன்னக்கொடி எஸ்.ஐ விஜய் முத்துக்குமார் உள்ளிட்ட போலீசார் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் சென்று கடந்த 22ஆம் தேதி நிர்வாக மேலாளர் பிரவீன் யாதவ்வை கைது செய்து அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இன்று மயிலாடுதுறைக்கு அழைத்து வந்து மயிலாடுதுறை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 1ல் ஆஜர் படுத்தினர். நீதிபதி கலைவாணி திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டதன் பேரில் திருச்சி மத்திய சிறையில் அடைக்க அழைத்து சென்றனர். தொடர்ந்து போலீசார் தலைமறைவாக உள்ள மகேந்திர யாதவ்வை கைது செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.