கோவை: திடீர் நிறுவன மூடல்-ஐடி ஊழியர்கள் போராட்டம்!
கோவையில் செயல்பட்டு வந்த ஐடி நிறுவனம் திடீரென முன்னறிவிப்பு இன்றி மூடப்பட்டதால் ஊழியர்கள் போராட்டம்.;
கோவை,ஆர்.எஸ்.புரத்தில் இயங்கி வந்த போக்கஸ் எஜுமேட்டிக் நிறுவனம் திடீரென மூடப்பட்டதால், 3000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.அமெரிக்க மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுத்து வந்த இந்த நிறுவனம், எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் கடந்த 25-ஆம் தேதி திடீரென செயல்பாட்டை நிறுத்தியுள்ளது. 12 ஆண்டுகள் முதல் 2 ஆண்டுகள் வரை பணிபுரிந்த ஊழியர்கள் அனைவரும் வேலையை இழந்து தவிக்கின்றனர். கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் பெற்று வந்தாலும், நிறுவனம் மூடப்பட்ட பிறகு ஜனவரி மாத ஊதியம் வழங்கப்படவில்லை. மேலும், நீண்ட காலமாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு எந்தவித நன்மைகளும் வழங்கப்படவில்லை. இந்நிலையில், பாதிக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தில் தலையிட்டு, பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு உரிய நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.