தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் தமிழக முதலமைச்சருக்கு நன்றி அறிவிப்பு
தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம்;
தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் டாக்டர் செந்தில், மாநில இணை செயலாளர் டாக்டர் குலோத்துங்க சோழன், மாவட்டத் தலைவர் டாக்டர் சசிகுமார் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள செய்தி குறிப்பு :- கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் இயங்கி வந்த ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரி தமிழக அரசின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு கடந்த பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த மருத்துவக் கல்லூரியில் போதுமான பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், மருத்துவர்கள் இல்லாத நிலை இருந்து வந்தது. இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தேசிய மருத்துவ ஆணையத்தின் நெறிமுறைகளின் படி மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வந்தனர். மேலும் கடந்த ஆட்சி காலத்தில் இருந்தே பல்வேறு கட்டங்களில் இந்த கோரிக்கையை தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கம் வலியுறுத்திக் கொண்டே வந்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த டிசம்பர் மாதம் (22-12-2024) கடலூரில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் இந்த பிரச்சினையை உடனடியாக சரி செய்ய வேண்டி தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு தமிழக அரசு கடலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு 194 மருத்துவ பணியிடங்களை கூடுதலாக உருவாக்கி அரசாணை வெளியிட்டுள்ளது அதில் 157 பணியிடங்கள் மருத்துவக் கல்லூரிக்கும், 37 பணியிடங்கள் பல் மருத்துவக் கல்லூரிக்கும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்படி புதியதாக ஏற்பட்ட பணியிடங்களுக்கு வருகின்ற பிப்ரவரி நான்காம் தேதி நடைபெறும் சிறப்பு கலந்தாய்வின் மூலம் பணி அமர்த்தப்பட உள்ளனர். இப்படி தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளுக்கு ஏற்ப பணியிடங்களை ஏற்படுத்தி கடலூர் அரசு மருத்துவக் கல்லூரியை அனைத்து வசதிகளையும் கொண்ட மருத்துவ கல்லூரி ஆக தரம் உயர்த்திய மாண்புமிகு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும், சுகாதார அமைச்சர் மற்றும் வேளாண்மை மற்றும உழவர்நலத்துறை அமைச்சர் அவர்களுக்கும் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் (TNGDA ) நன்றி தெரிவிக்கிறது . கடலூர் மாவட்டத்தில் உள்ள 30 லட்சம் மக்களும் அருகிலுள்ள மயிலாடுதுறை, அரியலூர் மாவட்ட மக்களும் வரும் காலங்களில் இதன் மூலம் பயனடைவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.