நெய்வேலி அருகே ஏரியில் வாலிபர் பிணம்

அடித்துக் கொலையா? என போலீசார் விசாரணை;

Update: 2025-01-29 16:55 GMT
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள காட்டுக்கூனங்குறிச்சி ஏரி பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிள் அனாதையாக நின்று கொண்டிருந்தது. மோட்டார் சைக்கிளில் செல்போன் மற்றும் செருப்பு ஆகியவையும் இருந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ஊமங்கலம் போலீசார் விரைந்து சென்று அது யாருடைய மோட்டார் சைக்கிள், ஏன் அங்கு நிற்கிறது என்பது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது போலீசார் மோட்டார் சைக்கிளில் இருந்த செல்போனை ஆன் செய்து விசாரணை நடத்திய போது அந்த மோட்டார் சைக்கிள் விருத்தாசலத்தை சேர்ந்த ஒரு வாலிபருடையது என்பது தெரிய வந்தது. இந்நிலையில் விருத்தாச்சலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அந்த மோட்டார் சைக்கிள் விருத்தாச்சலம் திரு வி க நகரில் வசித்து வரும் மாரியப்பன் நாடார் என்பவரது மகன் சுரேஷ்குமார் 27 என்பவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் என்பதும் தெரியவந்தது. மேலும் கடந்த 27 ந் தேதி மோட்டார் சைக்கிளில் சென்ற சுரேஷ்குமார் மீண்டும் வீடு திரும்பவில்லை என 28ந் தேதி விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் அவரது தந்தை புகார் கொடுத்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது. இந்த ஏரி என்.எல்.சி 2 வது டெர்மலுக்கு தண்ணீர் எடுக்கும் ஏரி என்பதால், மோட்டாரை நிறுத்திய உடன் சிறிது நேரத்தில் குளத்தில் சுரேஷ்குமாரின் உடல் பிணமாக மிதந்து கொண்டிருந்தது. இதனை கண்ட போலீசார் அவரது பிரேதத்தை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் .ஏரியில் பிணமாக கடந்த சுரேஷ்குமார் என்பவரை யாரேனும் அடித்து கொலை செய்து ஏரியில் வீசிவிட்டு சென்றனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து ஊ.மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Similar News