சாலையோரம் இறைச்சி கழிவு ஆரநேரியில் சுகாதார சீர்கேடு
ஆரநேரி சுடுகாடு அருகே உள்ள காலி இடத்தில் கொட்டப்படும் இறைச்சி கழிவால் சுகாதார சீர்கேடு;

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம் போந்துார் ஊராட்சிக்குட்பட்ட ஆரநேரி கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. தவிர, ஸ்ரீபெரும்புதுார், வல்லம் சிப்காட் தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஏராளமான தொழிலாளர்கள், வாடகை வீட்டில் தங்கி பணிசெய்து வருகின்றனர்.ஆரநேரி பிரதான சாலை வழியாக ஸ்ரீபெரும்புதுார், மாம்பாக்கம், சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றனர். அதேபோல், வல்லம், ஒரகடம் சிப்காட் தொழிற்சாலைகளுக்கு செல்லும் பிரதான சாலையாக உள்ளது. இப்பகுதியில் செயல்பட்டு வரும் இறைச்சி கடைகளில் இருந்து வெளியேறும் கழிவு, உணவு கழிவு, குப்பை உள்ளிட்டவை, இந்த பிரதான சாலையோரம் உள்ள ஆரநேரி சுடுகாடு அருகே உள்ள காலி இடத்தில் கொட்டுகின்றனர். இதனால், இச்சாலை வழியே நடந்து செல்லும் பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், சாலையோரம் மூட்டை மூட்டையாக கொட்டப்படும் கோழி கழிவு மற்றும் முடிகள், காற்றில் பறந்து வாகன ஓட்டிகளின் கண்களை பதம்பார்க்கிறது. இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதன் காரணமாக, நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, சாலையோரம் இறைச்சி கழிவுகள் கொட்டும் கடைகள் மீது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.