பாலாற்றில் கருவேல மரங்கள் நிலத்தடிநீர் பாதிக்கும் அபாயம்
கருவேல மரங்களை வேரோடு அகற்ற, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை;

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் -- செங்கல்பட்டு சாலையில், பழையசீவரம் உள்ளது. இப்பகுதியில், 10 ஆண்டுகளுக்கு முன் அரசு அனுமதி பெற்ற மணல் குவாரி செயல்பட்டது.அப்போது, அரசு அனுமதித்த அளவை காட்டிலும், கூடுதலான துாரம் மற்றும் அதிக ஆழம் பள்ளம் தோண்டப்பட்டு, மணல் அள்ளப்பட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர். இதை தொடர்ந்து, பழையசீவரம் பாலாற்றில் மணல் குவாரி செயல்பட்ட படுகைகளில், மணல் இல்லாத கரம்பு நிலங்களாக மாறியது. இதனால், அப்பகுதியில் பல வகையான செடி, கொடிகள் மற்றும் கருவேல மரங்கள் வளர்ந்து காடு போல் காட்சியளிக்கிறது. இதனால், சுற்றியுள்ள விவசாய நிலங்களின் நிலத்தடி நீர்மட்ட ஆதாரம் குறைந்து வருவதாக, அப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். எனவே, கருவேல மரங்களை வேரோடு அகற்ற, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.