ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மீனவர் சங்கம் கோரிக்கை மனு அளித்தனர்
மண்டபம் விசைப்படகுகளின் கரையோர மீன்பிடிப்பை தடுக்க வேண்டும் கடல் தொழிலாளர் சங்கம் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்;
ராமநாதபுரம்மண்டபம் போன்ற பகுதிகளில் அரசு விதிமுறையை மீறி கரையோர மீன்பிடிப்பில் ஈடுபடும் விசைப்படகுகள் தடுத்து நிறுத்த வேண்டும் என கடல் தொழிலாளர் சங்கத்தினர் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர். ராமநாதபுரம் மாவட்ட சிஐடியு கடல் தொழிலாளர் சங்கம் சார்பில் மண்டபம் விசைப்படகுகள் விதி மீறி கரையோர மீன்பிடிப்பு மற்றும் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதை தடுக்கக்கோரி, சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.கருணாமூர்த்தி தலைமையில் மீனவர்கள் ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். இதுகுறித்து மாவட்ட செயலாளர் எம்.கருணாமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது: மண்டபம் விசைப்படகுகள் அரசு சட்ட விதிமுறைகளை மீறி கரையோர மீன்பிடிப்பில் ஈடுபடுவதை தடுத்து, கரையோர மீன்பிடிப்பை மட்டுமே நம்பி வாழும் கரைவலை, சிறு தொழில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும். தனுஷ்கோடி தெற்கு கடல் பகுதியில் பாரம்பரிய மீனவர்களுக்கு கேடுவிளைவிக்கும் வகையில் இரட்டைமடி மீன்பிடிப்பில் ஈடுபட்டு வரும் மண்டபம், பாம்பன் விசைப்படகுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.ராமேசுவரம் தீவு பகுதிக்குள்ளும் மாவட்டத்தின் இதர சில பகுதிகளிலும் மீன்வளத்துறைக்கு நன்கு தெரிந்தே நடைபெறும் சுருக்குமடி மீன்பிடிப்பை தடுத்து நிறுத்த வேண்டும். கடல்வளத்தையும் , மீன்வளத்தையும் முற்றிலுமாக அழிப்பதுடன் இலங்கை கடற்படையின் நம் மீனவர்கள் மீதான கைது நடவடிக்கைக்கும் காரணமான இரட்டைமடி மீன்பிடிப்பு ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தடையின்றி நடைபெறுவதை தடுக்க வேண்டும். இரட்டைமடி, சுருக்குமடி போன்ற அரசால் தடை செய்யப்பட்ட மீன்பிடிப்புகள் தொடர மீன்வளத்துறையினர் முறைகேடாக பண பரிமாற்றம் நடைபெறுவது குறித்து பொது விசாரணைக்கு உத்தர விட கோரியும். ஆட்சியர் தலைமையில் மாதந்தோறும் நடைபெறும் மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டும் என ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளோம் எனக் கூறினார்.