மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்;
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சியில் சுமார் 30-ஆயிரம் விசைத்தறிகளும், ஏராளமான நூற்பாலைகளும் இயங்கி வருகின்றன. இந்த தொழில்களை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். பள்ளிபாளையம் குமாரபாளையத்தில் உற்பத்தியாகும் விசைத்தறி ஜவுளிகள் அருகில் உள்ள ஈரோடு மாவட்டத்திற்கு தினந்தோறும் கொண்டு செல்லப்படுகிறது. பள்ளிபாளையத்தில் உள்ள 4 முனை சந்திப்பு வழியாக நாமக்கல், திருச்சி ,ஆத்தூர், கரூர், தர்மபுரி கிருஷ்ணகிரி, சென்னை, பெங்களூர் ஆகிய பகுதிகளுக்கு. நாள்தோறும் 1000-க்கும் மேற்பட்ட பஸ்களும் கனரக வாகனங்களும் இந்த சந்திப்பை கடந்து செல்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் இங்கிருந்து பேருந்துகளில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.தொடர்ச்சியாக அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் பாதிப்பு காரணமாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சென்னை -கன்னியாகுமரி தொழிற்தடத் திட்டத்தின் கீழ் ராசிபுரம்-திருச்செங்கோடு-ஈரோடு சாலையில் விரிவாக்கப்பணி நடைபெற்று வந்தது. அரசின் நிதி பற்றாக்குறையினால் சிறிது காலம் பணியில் தொய்வு ஏற்பட்டு தற்போது மேம்பாலப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இம்மேம்பாலம் எப்போது பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இப்பாலம் பயன்பாட்டிற்கு வந்தால் பள்ளிபாளையத்தில் போக்குவரத்துக்கு நெரிசல் மிகவும் குறையும், ஆகவே இம்மேம்பாலத்தினை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். மேலும் தேவைபடும் இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும்.விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைக்கின்றனர்.