தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் க.தனலெட்சுமி தலைமை வகித்தார். ஆசிரியை ச.விஜயகுமாரி வரவேற்றார். ஆசிரியை த.கிருஷ்ணவேணி ஆண்டறிக்கை வாசித்தார். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது, "பள்ளிப்பருவம் என்பது மறக்க முடியாதது. கவலைகள் ஏதுமின்றி பட்டாம்பூச்சியாக பறந்து திரியும் பருவம். அறிவியல் வளர்ச்சியில் இன்று ஒவ்வொருவர் கையிலும் செல்போன் உள்ளது. அதனை ஆக்கபூர்வமாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம், அழிவுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். அது உங்கள் ஒவ்வொருவர் கையில் தான் உள்ளது. நீங்கள் எல்லாம் பக்குவப்பட்டவர்கள். எனவே செல்போனை கவனமாக கையாள வேண்டும். மாணவிகள் கல்வி கற்பதுடன், ஒழுக்கத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும். அரசு பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ளன. மாணவிகள் இன்றிலிருந்து தங்களது கவனத்தை படிப்பில் செலுத்த வேண்டும். வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும். பள்ளிக்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்க்க வேண்டும். தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறைக்கு என ஏராளமான நிதி ஒதுக்கீடு செய்து, மாணவ, மாணவிகள் நலனுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அதனை நீங்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றார். தொடர்ந்து மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில், பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர், பேரூராட்சி கவுன்சிலர் ஹபீபா பாரூக், கல்விப் புரவலர் அ.அப்துல் மஜீத், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் எஸ்.மகேஸ்வரி, வே.கயல் விழி, ஆசிரியர் பயிற்றுநர் ஷாஜிதா பானு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக உதவி தலைமை ஆசிரியர் த.புவனேஸ்வரி நன்றி கூறினார். முன்னதாக விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் மாணவியர்கள் 12 பேருக்கு ரூ.12 ஆயிரம் மதிப்பிலான காலணிகளை சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் வழங்கினார். மேலும் பள்ளி வளர்ச்சி நிதியாக ரூபாய் 10 ஆயிரத்தை பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவரிடம் வழங்கினார்.