அமைச்சர் பேட்டி
டெல்லியில் நடந்த தேர்தல் ஒட்டுமொத்த இந்தியா கூட்டணிக்கும் விழுந்த அடி என்றால் ஈரோடு கிழக்கு தொகுதி வெற்றி என்பது அதிமுகவிற்கு விழுந்த அடியா? என எடப்பாடி பழனிச்சாமியின் கருத்திற்கு அமைச்சர் முத்துசாமி பதிலடி கொடுத்துள்ளார்;
ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, 2021க்கு பிறகு நடந்த அத்தனை தேர்தலிலும் மக்கள் திமுகவிற்கு துணை நிற்பதாகவும், முதல்வரின் மக்கள் நலத்திட்டங்களால் ஈரோடு இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த தேர்தலை அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் புறக்கணித்திருக்கக் கூடாது என்ற அவர், அப்படி எதிர்க்கட்சிகள் போட்டியிட்டிருந்தாலும் கடந்த முறை என்ன வாக்குகள் பெற்றார்களோ அதைதான் வாங்கி இருப்பார்கள். ஆனால் அவர்கள் போட்டியிடாததால் எதிர்க்கட்சியைச் சார்ந்த வாக்குகள் பெரும்பாலும் திமுக அரசின் திட்டங்களால் திமுக பக்கம் திரும்பி விட்டதாகவும், சில வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு சென்றுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் தேர்தலில் போட்டியிடாததன் காரணமாகவே நாம் தமிழர் கட்சிக்கு வாக்குகள் அதிகரித்துள்ளதே தவிர பெரியார் குறித்து சீமான் பேசிய கருத்து காரணமாக அக்கட்சிக்கு வாக்குகள் ஏதும் அதிகரிக்கவில்லை என்றார். மேலும் ஈரோடு இடைத்தேர்தலில் திமுக போலி வெற்றி பெற்றிருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்த கருத்து குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் முத்துசாமி, இன்றைய காலத்தில் கள்ள ஓட்டுகள் போடுவது அவ்வளவு எளிதல்ல; அதிமுகவினர் சொல்வது தவறு, நியாயமான முறையில் இந்த தேர்தலை திமுக அனுகியதாகவும்; தேர்தலும் நியாயமாகவே நடந்ததாகவும் விளக்கமளித்தார். தொடர்ந்து டெல்லி தேர்தல் முடிவுகள் இந்தியா கூட்டணிக்கு விழுந்த சம்மட்டி அடி என்ற எடப்பாடி பழனிச்சாமியின் விமர்சனத்திற்கு பதிலளித்த முத்துசாமி, ஒரு மாநிலத்தில் நடந்த தேர்தல் ஒட்டுமொத்த கூட்டணிக்கும் விழுந்த அடி என்றால், ஈரோட்டில் கிழக்கு தொகுதி வெற்றி என்பது அதிமுகவிற்கு விழுந்த அடியா? என கேள்வி எழுப்பியதோடு இந்தியா கூட்டணியை எந்த காலத்திலும் வீழ்த்த முடியாது என்றார்.