செருவாவிடுதி ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடற்புழு நீக்க பயிற்சி முகாம்
ஆரோக்கியம்;
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள செருவாவிடுதியில் இயங்கி வரும் தரம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில், குடற்புழு நீக்க விழிப்புணர்வு மற்றும் ஒரு நாள் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு பேராவூரணி வட்டார மருத்துவ அலுவலர் அருள் தலைமை வகித்துப் பேசுகையில், “ குழந்தைகளுக்கு குடற்புழு தாக்கத்தால் ரத்தசோகை ஏற்படுகிறது. மாணவர்கள் மந்தமாக செயல்படுவார்கள். ஆரோக்கியமற்ற முறையில் கழிப்பறைகளை பயன்படுத்துதல், காலில் செருப்பு அணியாமலும், திறந்த வெளி கழிப்பறைகளை பயன்படுத்துதல் ஆகியவற்றால் குடல்புழு தாக்கம் ஏற்படுகிறது. குடற்புழுவை வெளியேற்ற அல்பென்டோசோல் - 400 மில்லிகிராம் மாத்திரை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படுகிறது. பிறந்த குழந்தை முதல் 2 வயது குழந்தை வரை பாதி அளவு மாத்திரையும், இரண்டு வயதுக்கு மேல் 19 வயதுக்குட்பட்ட பருவத்தினருக்கு ஒரு மாத்திரையும் என 6 மாதத்திற்கு ஒரு முறை வழங்க வேண்டும். இதன் மூலம் ரத்த சோகை வராமல் தடுக்கப்படுவதுடன் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்" என்றார். நிகழ்வில் மருத்துவ அலுவலர் கௌசிகா முன்னிலை வகித்தார். பேராவூரணி வட்டாரத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த இருபால் ஆசிரியர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். மருந்தாளுனர் சரவணன், சமுதாய செவிலியர் மணிமேகலை, பகுதி சுகாதார ஆய்வாளர் அன்னக்கிளி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் திருப்பதி, சுகாதார ஆய்வாளர் தவமணி மற்றும் செவிலியர்களும் முகாமில் கலந்து கொண்டனர்.