விவசாயிகளுக்காக அண்ணாமலை நீலிக்கண்ணீர் வடிப்பது கபட நாடகம்....  தமிழக மக்கள் புரட்சிக் கழகம் கண்டனம்

அறிக்கை;

Update: 2025-02-08 17:37 GMT
நெல் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலையை தீர்மானிக்காத பாஜக அரசுதான் விவசாயிகளின் கடன் நெருக்கடிக்கு காரணம். அதை மறைக்க தமிழக அரசு மீது பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி நீலிக்கண்ணீர் வடிப்பது கபட நாடகம் என தமிழக மக்கள் புரட்சிக் கழக மாநில தலைவர் அரங்க.குணசேகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது,  "சிறு, குறு விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கம் மூலம் வழங்கப்பட்ட பயிர்க்கடன்களை தமிழக அரசு ரத்து செய்யாதது தான் விவசாயிகளின் கடன் நெருக்கடிக்கு காரணம் என பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி நீலிக்கண்ணீர் வடிப்பது அப்பட்டமான கபட நாடகம். இந்தியா முழுவதும் விவசாயிகளை கடன் நெருக்கடியில் தள்ளியதற்கு ஒன்றிய பாஜக அரசே முழு காரணம். உரம், பூச்சிக்கொல்லி உள்ளிட்ட வேளாண் இடுபொருட்களின் விலையை கடுமையாக உயர்த்தி,  நெல், கரும்பு, பருத்திக்கான விலையை ஒன்றிய அரசு உயர்த்தாததே விவசாயிகள் கடன் வலையில் சிக்கியிருப்பதற்கு காரணம். புயல், மழை, வெள்ள நேரங்களில் தமிழக அரசு கேட்கும் இழப்பீட்டு நிவாரணத் தொகையை காலத்தே வழங்காததே விவசாயிகளின் துயரத்துக்கு முதன்மையான காரணம். ஒன்றிய பாஜக ஆட்சியின் தவறுகளை மூடி மறைக்க தமிழக அரசின்மீது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டுவது அப்பட்டமான கபட நாடக அரசியல் திசை திருப்பல், அண்ணாமலையின்    சந்தர்ப்பவாத அரசியலை தமிழக மக்கள் என்றும் நம்ப மாட்டார்கள்" என அறிக்கையில் தெரிவித்துள்ளார் .

Similar News