ஜாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு தான் நடத்த முடியும்: அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தகவல்
அமைச்சர்;
தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மற்றும் சீர்மரபினர் நலவாரிய தலைவர் சிவ.வீ.மெய்யநாதன் தலைமையில், 15 மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் துறை அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர்கள் எண்ணிக்கை 15 மாவட்டங்களில், 50 ஆயிரமாக உயர்த்த ஆலோசிக்கப்பட்டது. கடந்த 2024-ஆம் ஆண்டில், 15 மாவட்டங்களில் 2017 சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். கடந்த 3 மாதத்தில் மட்டும் 15 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு, அதில் 10 ஆயிரம் பேருக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ளவர்களுக்கு விரைவில் வழங்கப்படும். தமிழகத்தில் 1,371 பிற்படுத்தப்பட்டோர் மாணவ, மாணவிகள் விடுதிகள் உள்ளது. விடுதி கட்டடத்தின் தரத்தை மேம்படுத்த முதற்கட்டமாக 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு கூடுதலாக 50 கோடி ரூபாயை முதல்வரிடம் கேட்டுள்ளோம். இந்த நிதி மூலம் விடுதிகள் முழுமையாக பராமரித்து, புதிய கட்டடமாக மாற்றப்படும். ஜாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு தான் நடத்த வேண்டும். கடந்த 2021 ஆம் ஆண்டு, ஒன்றிய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தியிருக்க வேண்டும். ஆனால், மூன்று ஆண்டுகளைக் கடந்தும் இதுவரை கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்தவில்லை. மக்கள் தொகை கணக்கெடுப்பு திட்டத்தின் மூலம் தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க முடியும். மாநில அரசு எடுக்கும் ஜாதிவாரி கணக்கெடுப்புகளை வைத்து ஒன்றுமே செய்ய முடியாது. நீதிமன்றங்கள் அந்த மாதிரி எடுக்கப்படுகின்ற கணக்கெடுப்பு தள்ளுபடி செய்கின்றனர். இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் தமிழக முதல்வர் செயல்படுத்தும் திட்டங்களை எல்லாம், பின்பற்றி வரும் நிலைக்கு தமிழகத்தை முதல்வர் உயர்த்தியுள்ளார். தமிழகத்தில் பல்வேறு துறைகள் சிறப்பாக செயல்படுகிறது என ஒன்றிய அரசு பாராட்டியுள்ளது. ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள் என்பது முதல்வர் ஸ்டாலினின் நான்கு ஆண்டு கால ஆட்சிக்கு மக்கள் அளித்துள்ள மிகப்பெரிய அங்கீகாரம்" இவ்வாறு அவர் கூறினார். இக்கூட்டத்தில், சீர்மரபினர் நலவாரியம் துணைத்தலைவர் ராச.அருண்மொழி, ஆணையர்/உறுப்பினர் செயலர் வா.சம்பத், ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், மாநிலங்களவை உறுப்பினர் சு.கல்யாணசுந்தரம், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், கா.அண்ணாதுரை, என்.அசோக்குமார், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.