தஞ்சாவூரில், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சி.ஐ.டி.யு) மாநில செயற்குழு கூட்டம் வெள்ளி, சனிக்கிழமை நடந்தது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் டி.ஜெய்சங்கர் தலைமை வகித்தார். சிஐடியு தமிழ்நாடு மாநில பொது செயலாளர் ஜி.சுகுமாரன் துவக்க உரையாற்றினார். மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் சிறப்புரையாற்றினார். கூட்டத்திற்கு பிறகு, ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மின்வாரியத்துறை 1957 ஆம் ஆண்டு உருவான காலத்தில் இருந்து, 1972, 84, 89, 96, 2004, 2007 ஆண்டுகளில் மின்சார வாரியத்தில் பணியாற்றிய ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்யப்பட்டனர். இதில் தி.மு.க., ஆட்சியில் நடந்தவை. ஆனால், தமிழக மின்வாரியத்துறையில் ஒப்பந்த தொழிலாளர்கள் இல்லை என்பது மின்துறை அமைச்சர் கடந்த 24ம் தேதி ஒரு தகவல் கூறியது தொழிலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புயல் மழை வெள்ள காலங்களில் மிகக்குறுகிய காலத்தில் சாய்ந்த மின் கம்பங்களை சீர் செய்து, அரசுக்கு பெருமை சேர்த்தது ஒப்பந்த தொழிலாளர்கள் தான். ஆனால் ஒப்பந்த தொழிலாளர் இல்லை என கூறியதை கண்டித்து, வரும் மார்ச் 25ம் தேதி, மண்டல தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்த உள்ளோம். அதற்கு அடுத்த கட்டமாக ஏப்ரல் மாத இறுதியில் சென்னையில் கோட்டையை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்த உள்ளோம். கடந்த நான்கு ஆண்டு காலத்தில் 15 ஆயிரம் தொழிலாளர்கள் ஓய்வு பெற்று சென்றுள்ளனர். ஆனால், இந்த நான்கு ஆண்டு தி.மு.க., ஆட்சியில் மின்வாரியத்தில் காலி பணியிடங்கள் நிரப்பபடவில்லை. இந்நிலையில், அரசு ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கொண்டு வர போகிறோம் என்கிறார்கள். மின்சாரம் தனியாருக்கு செல்வதற்கான முதல்படியாக தான் ஸ்மார்ட் மீட்டர் திட்டம். இதில், தனியார் நிறுவனம் மீட்டர்களை பொருத்தும், கணக்கீடு செய்யும், மின் துண்டிப்பு என அனைத்து வேலைகளையும் செய்யவார்கள். இதனால், மின்வாரியத்தில் கணக்கீட்டாளர், மின் துண்டிப்பு உள்ளிட்ட ஊழியர்களுக்கான வேலை இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. கேளராவில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை அரசே கையாளும் என தெரிவித்துள்ளது போல, தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். இது போன்ற கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் வரும் 25 ஆம் தேதி அனைத்து வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தை நடத்த உள்ளோம்" என்றார். இதில், மாநில தலைவர் டி.ஜெயசங்கர், பொருளாளர் எம்.வெங்கடேசன், சிஐடியு மாவட்டச் செயலாளர் சி. ஜெயபால், மாவட்ட துணை செயலாளர் அன்பு, துணைப் பொதுச்செயலாளர்கள் பழனிவேலு, ரவிக்குமார், ரவிச்சந்திரன், பீர் முகமது ஷா, தஞ்சை மண்டல செயலாளர் ராஜாராமன், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் கோவிந்தராஜு மின் ஊழியர் மத்திய அமைப்பு தஞ்சை திட்ட செயலாளர் பி.காணிக்கைராஜ், திட்ட தலைவர் அதிதூத மைக்கேல்ராஜ், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு மாநில கன்வீனர் விஜயலெட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு, மின்வாரியத்தில் உள்ள 65,000 காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு தினக்கூலியை மின்வாரியமே வழங்கிட வேண்டும். பகுதிநேர ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கேங்மேன் ஊழியர்களை உதவியாளர்களாக மாற்றிட வேண்டும். கேங்மேன் பணியாளர்களுக்கு உள்ளூர் பணியிட மாறுதல் உடனடியாக வழங்கிட வேண்டும். 1.12.2019 முதல் 16.5.2023 க்குள் பணியில் சேர்ந்தவர்களுக்கு ஆறு சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும். 1.12.2023 முதல் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக துவக்க வேண்டும். கணக்கீட்டு பிரிவு, கணக்கு பிரிவு ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கிட வேண்டும்" என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.