லால்குடி அருகே அழுகிய நிலையில் பெண் உடல் மீட்பு
லால்குடி அருகே பெண்ணை கொன்று புதைக்கப்பட்டுள்ளது. அழுகிய நிலையில் உடல் மீட்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது;
லால்குடி அருகே அகலங்கநல்லூர் கிராமத்தில் இருந்து கீழ்மாரிமங்க லம் செல்லும் சாலையில் உள்ள உப்பாற்றின் பகுதியில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியது. இதை கண்ட அப்பகுதி மக்கள் லால்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தையன் தலைமையில் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்ட போது, அங்கு ஒருகுழியில் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். மேலும், அந்த பெண்ணின் உடல் பாதி புதைக்கப்பட்டும், பாதி புதைக் கப்படாத நிலையில் உடல் வெளியே தெரிந்தது. இதனால் அந்த பெண்ணை யாராவது கொலை செய்து குழியில் வீசி மண்ணை போட்டு புதைத்து இருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர். இதையடுத்து தடயவியல் நிபுணர்கள் அங்கிருந்த தடயங்களை சேகரித் தனர். மேலும் அந்த பெண் இறந்து 4 நாட்களுக்கு மேல் இருக்கும் என்பதால் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அகலங்கநல்லூர் கிராம நிர்வாக அதிகாரி கண்மணி கொடுத்த புகாரின் பேரில் லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்?. அவரை கொன்றவர்கள் யார்?. யாராவது அவரை கடத்தி வந்து கொலை செய்தார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்ப வம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது