விவசாயிகளின் வேளாண்மை குறித்த தரவுகள் சேகரிக்கும் பணி
திருமருகல் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்;
நாகை மாவட்டம் திருமருகல் வேளாண்மை துறையில், விவசாயிகளின்வேளாண்மை குறித்த தரவுகள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து, திருமருகல் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் புஷ்கலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது வேளாண் அடுக்ககம் திட்டத்தில், நில விவரங்களுடன் விவசாயிகள் பதிவு விபரம் மற்றும் நில உடமை வாரியாக புவிசார்பு குறியீடு செய்த பதிவு விவரம் மற்றும் நில உடமை வாரியாக மின்னணு பயிர் பதிவு விவரங்கள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்தத் திட்டமானது, மத்திய வேளாண் அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறையின் படி, மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது. மின்னணு முறையில் விவசாயிகளின் தரவுகள் சேகரிக்கப்பட்டு, மாநிலத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ஆதார் எண் போன்று விவசாயிகளுக்கு என தனித்துவமான அடையாள எண் வழங்கப்பட உள்ளது. விவசாயிகளின் ஒப்புதல் பெறப்பட்ட பின்னரே, விவசாயிகளின் தரவுகள் சேகரிக்கப்பட்டு அடையாள எண் வழங்கப்படும். இனிவரும் காலங்களில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் அனைத்து திட்ட பலன்களும் விவசாயிகளின் தரவுத்தளம் அடிப்படையிலேயே வழங்கப்படும். கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில், எளிய முறையில் பயிர் கடன் பெற இயலும். எனவே, திருமருகல் வட்டாரத்தைச் சேர்ந்த அனைத்து விவசாயிகளும் தங்கள் ஆதார் எண், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண், நில உடமை ஆவணங்கள் (சிட்டா) மற்றும் தங்களது வங்கி கணக்கு விபரங்கள் போன்றவற்றை தங்களது கிராமங்களில் உள்ள வேளாண் விரிவாக்கம் மையம், கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற உள்ள முகாம்களுக்கு எடுத்துச் சென்று வேளாண்மை துறை மற்றும் மகளிர் திட்ட பணியாளர்களிடம் பதிவு செய்து பயன்பெறலாம் . இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.