திருப்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில்
பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை;
நாகை மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் ஆலோசனையின் பேரில், குடற்புழு தொற்றை நீக்கும் விதமாக 1 முதல் 19 வயதுடைய 2 லட்சத்து 01 ஆயிரத்து 450 பள்ளி குழந்தைகளுக்கும், 20-30 வயதுடைய 48 ஆயிரத்து 415 பெண்களுக்கும் குடற்புழு மாத்திரை வழங்கப்பட உள்ளது. இன்று விடுபடும் அனைவருக்கும் வருகிற 17-ம் தேதி வழங்கப்பட உள்ளது. இதன் ஒருபகுதியாக, நாகை மாவட்டம் கீழையூர் வட்டாரத்தில், 1-19 வயதுடைய 19,580 மாணவ, மாணவிகளுக்கும், 20-30 வயதுடைய 4,294 பெண்களுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட உள்ளது. நாகை மாவட்டம் கீழையூர் அடுத்த திருப்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்த முகாமை, மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் பிரதீப் வாசுதேவன் கிருஷ்ணகுமார் தலைமை வைத்து, குடற்புழு நீக்க மாத்திரையை மாணவ, மாணவிகளுக்கு வழங்கி உட்கொள்ள செய்து முகாமை தொடங்கி வைத்தார். முகாமில், வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் என்.விஜயகுமார் திட்ட விளக்க உரையாற்றினார். முகாமில், மாவட்ட தாய்சேய் நல அலுவலர் கீதா, பள்ளி தலைமை ஆசிரியர் ஜெ.எஸ்தர் சாரா ஜாஸ்மின், சமூக சுகாதார செவிலியர் முத்துலெட்சுமி, வட்டார சுகாதார மெற்பார்வையாளர் கருப்புசாமி, பகுதி சுகாதார செவிலியர்கள் கலைச்செல்வி, மீனாட்சி, சுகாதார ஆய்வாளர் ஜெ.குணசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளியில், 526 மாணவ, மாணவிகள் குடற்புழு நீக்க மாத்திரையை உட்கொண்டனர்.முகாமிற்கான ஏற்பாடுகளை, சுகாதார ஆய்வாளர் சு.மோகன் செய்திருந்தார்.