மாவட்ட அளவிலான நெகிழி விழிப்புணர்வு கோலம் போட்டி

நாகை சிஎஸ்ஐ மேல்நிலைப்பள்ளி மாணவி முதலிடம்;

Update: 2025-02-10 12:09 GMT
நாகை மாவட்டம் இகோட்டோ சுற்றுச்சூழல் அமைப்பின் சார்பில், பள்ளி மாணவர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்களுக்கு நெகிழி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மாவட்ட அளவில் நெகிழி விழிப்புணர்வு கோலப்போட்டி நடைபெற்றது. கடந்த ஒரு மாதமாக நடந்த போட்டியில், மாவட்டம் முழுவதிலிருந்தும் பள்ளி மாணவர்களும், பெற்றோர்களும், பொதுமக்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டு, தங்களுடைய இல்லங்களின் வாசலில் நெகிழி விழிப்புணர்வை விளக்கும் கோலங்களை வரைந்து காட்சிப்படுத்தினர். அதிலிருந்து சிறப்பான நெகிழி விழிப்புணர்வு கோலங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.மாணவர்களுக்கான பிரிவில், நாகை சிஎஸ்ஐ மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவி தேஜாஸ்ரீ முதலிடமும், வேதாரண்யம் சாரதாம்பாள் மெட்ரிக் பள்ளியை சேர்ந்த மாணவி பூஜா ஸ்ரீ இரண்டாமிடமும், திட்டச்சேரி அரசினர் உயர்நிலைப்பள்ளியின் மாணவி ரக்க்ஷிதா மூன்றாமிடமும் பெற்றனர். பொதுமக்களுக்கான பிரிவில், பிரதாபராமபுரம் பகுதியை சேர்ந்த தீபா முதலிடமும், புத்தூர் பகுதியை சேர்ந்த ஆசிரியை வீரலட்சுமி இரண்டாமிடமும், செட்டிக்குளம் பகுதியை சேர்ந்த தீபா மற்றும் திருமருகல் பகுதியை சேர்ந்த காவியா ஆகியோர் மூன்றாமிடமும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், பாராட்டு சான்றிதழும், புத்தகமும் நாகப்பட்டினம் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தில் இருந்து பெறப்பட்ட மீண்டும் மஞ்சப்பையும் வழங்கப்பட்டன.போட்டியினை அனிதா ஹென்னா எலிசபெத் ஒருங்கிணைத்தார்.

Similar News