மாரியம்மன் கோயிலில் காஞ்சி சங்கராச்சாரியார் வழிபாடு

பக்தி;

Update: 2025-02-12 03:41 GMT
தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செவ்வாய்க்கிழமை வழிபட்டார். இக்கோயிலில் ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு பிறகு திருக்குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, இக்கோயிலுக்கு காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செவ்வாய்க்கிழமை வந்தார். சங்கராச்சாரியாருக்கு கோயில் சார்பில் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே, கோயில் சிவாச்சாரியார்கள் பூர்ண கும்ப மரியாதையுடனும், மேள, தாளத்துடனும் வரவேற்பு அளித்தனர். பின்னர், சுவாமி தரிசனம் செய்த சங்கராச்சாரியார் கோயில் முழுவதும் சுற்றிப் பார்த்தார். மேலும், குடமுழுக்கு விழாவை சிறப்பாக செய்த பாபாஜி ராஜா போன்ஸ்லேக்கு காஞ்சி காமகோடி பீடாதிபதி சார்பில் பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும், இக்கோயிலில் குடமுழுக்கு விழா நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மண்டலாபிஷேகம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

Similar News