குடமுழுக்கு விழா நன்கொடைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்
அரசியல்;
தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவுக்காகப் பெறப்பட்ட நன்கொடைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என பாஜக மாநிலப் பொதுச் செயலர் கருப்பு எம். முருகானந்தம் தெரிவித்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் திங்கள்கிழமை தெரிவித்தது: புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் குடமுழுக்கைக் காண்பதற்கும், மாரியம்மனை தரிசனம் செய்வதற்கும் கெடுபிடி இருந்ததாக மக்கள் குற்றச்சாட்டு சொல்கின்றனர். இந்த விழாவுக்காக கோயில் நிர்வாகம் சார்பில் நன்கொடைகள் பெருமளவில் பெறப்பட்டுள்ளன. இது பற்றிய வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும். இந்தக் குடமுழுக்கு விழாவுக்கு பாஸ் (முக்கிய பிரமுகர் நுழைவுச்சீட்டு) வழங்குவதில் மிகப் பெரிய முறைகேடு நிகழ்ந்துள்ளது. ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் அதிகமாக வழங்கப்பட்டுள்ளது; பொதுமக்களுக்கு வழங்கப்படவில்லை. தஞ்சாவூரிலுள்ள முக்கிய பிரமுகர்களுக்கும், அக்கோயிலுக்காக கோடிக்கணக்கான ரூபாய் நன்கொடை கொடுத்தவர்களுக்கும் ஓரிரு பாஸ் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இந்த பாஸ் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எவ்வளவு அச்சடிக்கப்பட்டு, எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது என்பதைத் தெரிவிக்க வேண்டும் என்றார் கருப்பு முருகானந்தம். அப்போது, பாஜக தெற்கு மாவட்டத் தலைவர் பி. ஜெய்சதீஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.