புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் குடமுழுக்கு: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

குடமுழுக்கு;

Update: 2025-02-12 05:22 GMT
தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் திருக்குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். இக்கோயிலில் ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து,  குடமுழுக்கு விழா விக்னேஸ்வர பூஜையுடன் பிப்ரவரி 3 ஆம் தேதி தொடங்கியது. பல்வேறு பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில், யாகசாலை பூஜைகள் பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கியது. ஆறு கால யாக பூஜைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, திங்கள்கிழமை காலை 9 மணியளவில் மகா பூர்ணாஹூதி, மகா தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, மாரியம்மன் மற்றும் பரிவார கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. இதையடுத்து, காலை 9.45 மணியளவில் விநாயகர், சுப்பிரமணியர், விஷ்ணு துர்க்கை, பேச்சியம்மன் விமானங்கள், ராஜகோபுரங்களில் மகா குடமுழுக்கு விழா நடைபெற்றது. பின்னர், 10 மணியளவில் மாரியம்மன் உள்ளிட்ட சன்னதிகளில் சிவாச்சாரியார்கள், ஓதுவார்கள் வேத பாராயணம், திருமுறைகளைப் பாட, கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, மகா குடமுழுக்கு நடத்தப்பட்டது. இவ்விழாவில் கோயிலைச் சுற்றி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.  மேலும், தெளிப்பான்கள் மூலம் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம், மாவட்ட வருவாய் அலுவலர் தெ. தியாகராஜன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூர்), மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே, அறநிலையத் துறை உதவி ஆணையர் கோ. கவிதா, சதய விழாக் குழுத் தலைவர் து. செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போக்குவரத்து நெரிசல்: இவ்விழாவையொட்டி 800க்கும் அதிகமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். என்றாலும், கூட்டம் அதிகமாக இருந்ததாலும், காவல் துறையினரின் கெடுபிடி காரணமாகவும் கோயிலுக்குள் பக்தர்கள் செல்வதில் மிகுந்த சிரமமான நிலை நிலவியது. மேலும் போக்குவரத்து காவலர்கள் போதுமான அளவுக்கு இல்லாததால், நாகை சாலையில் சில மணிநேரங்களுக்கு போக்குவரத்து நெரிசல் நிலவியது. இஸ்லாமியர்கள் சீர்வரிசை  கும் பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைக்கு தேவையான பழங்கள், நெய், புடவை, ஜாக்கெட் பிட் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை 51 தட்டுகளில், மாரியம்மன்கோவில் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய ஆண்கள், பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்தது முத்தாய்ப்பாகவும், மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News