குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து
நாகை -திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்;
நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் அகரகடம்பனூர் ஊராட்சி பெரியகுளம் பகுதியில், மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி உள்ளது. இந்த மேல்நிலைத் குடிநீர் தேக்க தொட்டி மூலம் ஆற்றங்கரை தெரு, சன்னதி தெரு, மெயின் ரோடு, மேல தெரு, கீழ தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் ஊராட்சி நிர்வாகம் மூலம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக சன்னதி தெரு உள்ளிட்ட பகுதிகளில் சரிவர குடிநீர் வராததால், அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்திருந்தனர். ஆனால் ஊராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்குவது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால், நேற்று நாகை - திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் அகரகடம்பனூர் பேருந்து நிறுத்தம் அருகே பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த, கீழ்வேளூர் வட்டாட்சியர் கவிதாஸ், ஊரக வளர்ச்சி துறை மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகரன், வருவாய் ஆய்வாளர் அகிலா உள்ளிட்ட அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர் . பேச்சுவார்த்தையில், மேல்நிலைத் குடிநீர் தேக்க தொட்டியில் உள்ள மோட்டார் பழுதை சீர் செய்து, குடி நீர் வராத பகுதிகளுக்கு குடி நீர் வழங்கப்படும் என்று உறுதியளித்ததின் பேரில், சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. மறியல் போராட்டம் காரணமாக, நாகை- திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.