பள்ளியின் நிர்வாக அனுமதி இல்லாமல் பூட்டை உடைத்த கல்வித்துறை அதிகாரிகள் மீது வழக்கு

நீதிமன்றத்தில் ஆஜரான கல்வித் துறை அதிகாரிகள்;

Update: 2025-02-13 06:56 GMT
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தேத்தாகுடி தெற்கு ஊராட்சியில், 75 ஆண்டுகளுக்கும் மேலாக, சரஸ்வதி தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக ரகுபதி செயல்பட்டு வந்தார். இப்பள்ளியில், கோதண்டபாணி என்ற ஆசிரியர் பணிபுரிந்து வந்தார். தலைமை ஆசிரியர் ரகுபதிக்கும், ஆசிரியர் கோதண்டபாணிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், ஆசிரியர் கோதண்டபாணி பள்ளிக்கு வராமல் விடுமுறையில் இருந்து வந்துள்ளார். ஆசிரியர் கோதண்டபாணிநிர்வாகத்தின் ஒப்புதல் இல்லாமல், கல்வித்துறை அதிகாரிகள் வேறு பள்ளிக்கு பணி மாறுதலில் அனுப்பி வைத்தனர். தலைமையாசிரியர் ரகுபதி கடந்தாண்டு மே மாதம் ஓய்வு பெற்றார். மேலும், தனது பள்ளியில் பணியாற்ற வேறு ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால், தற்காலிகமாக பள்ளியை மூடி விடுவதாகவும், மாணவ, மாணவிகளை வேறு பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கல்வித் துறைக்கு கடிதம் எழுதி, பள்ளியில் படித்த குழந்தைகளுக்கு மாற்று சான்றிதழ் வழங்கி விட்டார். இதை அறிந்த பெற்றோர்கள், அரசு உதவி பெற்று நடத்தப்படும் பள்ளியை தொடர்ந்து அதே இடத்தில் அரசு நடத்த வேண்டும் என கல்வித்துறை, மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு கடிதம் எழுதினர். இதை அடுத்து, அப்போது இருந்த மாவட்ட ஆட்சியர், அரசு உதவி பெற்று நடத்தப்படும் பள்ளியை யாரும் மூடக்கூடாது. பணி மாறுதலில் சென்ற ஆசிரியரை கொண்டு, மீண்டும் பள்ளியை நடத்த வேண்டும் என உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, வருவாய்த்துறை, கல்வித்துறை அலுவலர்கள் பள்ளியின் பூட்டை உடைத்து, அப்பகுதியில் சமுதாயக்கூடத்தில் இயங்கி வந்த பள்ளியை, பழைய இடத்தில் வகுப்புகளை நடத்த நடவடிக்கை மேற்கொண்டனர். இந்நிலையில், பழுதடைந்த பள்ளி கட்டிடம், ஜேசிபி இயந்திரம் மூலம் நிர்வாகியால் இடிக்கப்பட்டது. இதனால் மீண்டும் அங்குள்ள சமுதாயக்கூடத்தில் பள்ளி இயக்கப்படுகிறது. இதனால் பழுதடைந்த பள்ளி கட்டடத்தை இடித்தவர்கள் மீது கல்வித் துறையினர் வேதாரண்யம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பள்ளியின் நிர்வாக அனுமதியில்லாமல், பூட்டை உடைத்த கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மீது வேதாரண்யம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ரகுபதி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் வட்டார கல்வி அலுவலர் மற்றும் அதிகாரிகள் நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரசு உதவி பெறும் சரஸ்வதி தொடக்கப்பள்ளியில் ஏற்பட்டுள்ள நிர்வாக மோதல் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து பள்ளி மாணவ, மாணவிகளின் கல்வி பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News