திருச்சி : ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவை: எஸ்டிபிஐ

ஜாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசே நடத்த வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது;

Update: 2025-02-13 12:29 GMT
திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற கட்சியின் மாவட்டத் தலைவா்கள் மற்றும் பொதுச் செயலா்கள் சந்திப்புக் கூட்டத்துக்கு, மாநிலத் தலைவா் நெல்லை முபாரக் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலா்கள் நிஜாம் முஹைதீன், அஹமது நவவி, அபுபக்கா் சித்திக், மாநில அமைப்புப் பொதுச் செயலா் நஸ்ருதீன், மாநிலச் செயலா்கள் வழ. ஹஸ்ஸான், ஹமீது ஃபிரோஜ் மற்றும் மண்டல நிா்வாகிகள் ஆலோசனை நடத்தினா். கூட்டத்தில் பிகாா், தெலுங்கானா மாநிலத்தைப் போன்று தமிழக அரசும் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு எப்போது வேண்டுமானாலும் விசாரணைக்கு வரலாம். அப்போது ஜாதி அடிப்படையிலான விவரங்கள் தேவைப்படும் என்பதால் தமிழக அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்திட வேண்டும். தேசியக் கல்விக் கொள்கையின் சாயல்கூட இல்லாத, தமிழக அரசின் கல்விக் கொள்கை என்ன என்பதை தமிழக அரசு விரைவாக அறிவித்து அதை வரும் கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்த வேண்டும். ஊராட்சி செயலா்கள் ஒரே கிராம ஊராட்சியில் தொடா்ந்து பல ஆண்டுகள் பணிபுரிவதை தடுக்கும் பொருட்டு பணி மாறுதல் வழங்க நடவடிக்கை எடுக்கும் வகையில் ஊரக வளா்ச்சித் துறை இயக்குநரின் உத்தரவை விரைந்து செயல்படுத்த வேண்டும். வக்ஃப் சட்டத்தை திருத்துவதற்கான தற்போதைய நடவடிக்கை அரசியலமைப்பிற்கு எதிரானது. நாடாளுமன்றத்தில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் பட்சத்தில் எதிா்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்த மசோதாவை தோல்வியுறச் செய்திட வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Similar News