ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆய்வு மாணவர்களுக்கு உதவித்தொகை 

உதவித்தொகை ;

Update: 2025-02-13 16:00 GMT
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின், தொல்குடியினர் புத்தாய்வுத் திட்டத்தில் 2024-2025 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் தொல்குடி மக்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளும் முனைவர் பட்ட, முதுகலை மாணவர்களுக்கான உதவித்தொகையை தமிழக அரசு வழங்கி வருகிறது.  இந்நிலையில், தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களும், முதுகலை மாணவர்களும், மொழிப்புல முதன்மையர் ச.கவிதா ஒருங்கிணைப்பில் அதற்காக விண்ணப்பித்திருந்தனர்.  அதில், தமிழ்நாடு அளவில் 45 முனைவர் பட்ட மாணவர்களும், 25 முதுகலை மாணவர்களும் தேர்வாகியுள்ளனர்.  அவர்களிள் தமிழ்ப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ந.நதியா, து.தர்ஷினி, செ.பிரபாகர், ஞா.சௌபர்ணிகா மற்றும் ச.தமிழரசி ஆகிய 5 பேர் தேர்வாகியுள்ளனர். இதில் து.தர்ஷினி மாற்றுப் பாலினத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  மாதம் தோறும் முனைவர் பட்ட ஆய்விற்கு ரூ.25 ஆயிரம் வீதம் 3 ஆண்டுகளுக்கும் முதுகலைப் பட்ட ஆய்விற்கு ரூ.10 ஆயிரம் வீதம் 6 மாதங்களும் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இவர்களுக்கான தேர்வு ஆணையை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் (பொ) பேரா. க.சங்கர் வழங்கி மாணவர்களையும் ஒருங்கிணைப்பாளரையும் பாராட்டினார்.  இந்நிகழ்வில், பதிவாளர் (பொ) கோ.பன்னீர்செல்வம், கல்வெட்டியல் துறைத் தலைவர் முனைவர் மா.பவானி, மக்கள் தொடர்பு அலுவலர் இரா.சு.முருகன், நேர்முக உதவியாளர் க.செந்தில்குமார், இளநிலை உதவியாளர் உ.தெ.பூங்குன்றன் ஆகியோர் உடனிருந்தனர்.

Similar News