பாலின் தரத்தின் அடிப்படையில் அரசு நிர்ணயித்த கொள்முதல் விலையை வழங்க
கூட்டத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு ஆலோசனை;
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரம் ஊராட்சியில், தஞ்சாவூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம், கால்நடை பராமரிப்புத் துறை, தமிழ்நாடு மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம் ஆகியவை இணைந்து நடத்தும் ஆவின் பால் உற்பத்தியாளர்கள் ஆலோசனை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு, கால்நடை துறை மண்டல இணை இயக்குனர் (பொறுப்பு) ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். உதவி இயக்குனர் விஜயகுமார், பேராசிரியர் சுரேஷ், ஆவின் மேலாளர் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக, திருப்பயத்தங்குடி கால்நடை உதவி மருத்துவர் முத்துக்குமார் வரவேற்றார். முகாமில், உற்பத்தியாளர்களிடம் பால் முழுவதையும் கொள்முதல் செய்வது, 10 நாட்களுக்கு ஒரு முறை பணம் கிடைக்க செய்வது, பாலின் தரத்தின் அடிப்படையில் அரசு நிர்ணயித்த கொள்முதல் விலையை வழங்குவது குறித்து பல்வேறு ஆலோசனைகள் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டது. கூட்டத்தில், கால்நடை உதவி மருத்துவர்கள் இளவரசி, பூபதி, கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் சிவராணி, சிவராஜவள்ளி, செயற்கை முறை கருவூட்டாளர் தம்பிராஜா மற்றும் பால் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள், கிராம நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில், கால்நடை உதவி மருத்துவர் ராதா நன்றி கூறினார். முகாமில், கால்நடை உரிமையாளர்கள் அனைவருக்கும் தாது உப்பு இலவசமாக வழங்கப்பட்டது.