அறிவாலயத்தின் செங்கற்களை பெயர்த்து விட்டு தான் செல்வேன் என அண்ணாமலை சொல்வதைக் கேட்டால்
சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது என அமைச்சர் பதில்;
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த பிரதாபராமபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில், கணினி முன்னறிவு ஆய்வகத்தை தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். மூன்று அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பல்வேறு படைப்புகளை பார்வையிட்ட அவர், மாணவர்களிடம் அது தொடர்பாக கலந்துரையாடினார். பின்னர் அமைச்சர் செய்தியாளர்கள் சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது கோட்டைக்கு செல்ல வேண்டுமென்றால், இந்த செங்கோட்டையனை தாண்டி தான் செல்ல வேண்டும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசியது குறித்து, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், தேர்தல் நெருங்குவதால், தற்போது ஆளாளுக்கு பஞ்ச் டயலாக் பேசும் சீசன் தொடங்கியுள்ளது. மக்களுக்கு ஆற்ற வேண்டிய சேவை இன்னும் இருப்பதால் தொடர்ந்து, திமுக அரசு அப்பணியை செய்யும். வருகிற 2026 தேர்தலிலும் அது தொடரும். சீஓட்டர்ஸ் கருத்துக் கணிப்பு தங்களுக்கு பெருமையாக இருக்கிறது. மேலும், நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. தேர்தலில் திமுக வெற்றி பெறுகிறது என்றால், அது மக்களுக்கான வெற்றி. பட்ஜெட் விவகாரம் குறித்த கேள்விக்கு, 2500 கோடி கல்வி மானியம் மாநில பட்டியலில் கொடுக்க வேண்டும். இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருக்கக்கூடிய பள்ளிக்கல்வித் துறை, ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு அத்தி பூத்தார் போல் இருந்த மாணவர்களின் கல்வி சேர்க்கை என்பது வெகுவாக உயர்ந்துள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை மூலம் மட்டும் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு கல்லூரிகளில் சென்று படிக்கக்கூடிய வாய்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளதை வெற்றியாகப் பார்க்கிறோம். மத்திய அரசு ஒத்துழைப்பு கொடுத்தால், சாதனை புரிய மாணவர்கள் காத்திருக்கிறார்கள். 6 லட்சத்து 23 ஆயிரம் கோடி ரூபாய் வரி பணமாக கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழகத்திற்கு எவ்வளவு நிதி வழங்கப்பட்டிருக்கிறது என்பதை முதலில் பார்க்க வேண்டும். மேலும், தமிழ்நாடு முதல்வர் கூட வடக்கில் இருக்கின்ற அரசா அல்லது வட்டிக்கடை நடத்துகின்ற அரசா என்ற கேள்வியையும் எழுப்பி இருக்கிறார். அறிவாலயத்தின் செங்கற்களை பெயர்த்து விட்டு தான் செல்வேன் என அண்ணாமலை பேசியது குறித்த கேள்விக்கு, அவர் பேசியதை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது. சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது என பதில் அளித்தார். நூற்றாண்டு கடந்த அரசு பள்ளிகளில், அரசு விழா எடுப்பது போல, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் அதை விரிவுபடுத்தப்படுமா என்ற கேள்விக்கு, நூற்றாண்டு விழா மட்டுமின்றி காலை சிற்றுண்டி திட்டம் உள்ளிட்டவை முழுமையாக விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், எம்எல்ஏ நாகை மாலி, தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத் தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.