தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பொறுப்புக் குழு நியமனத்துக்கு ஆளுநர் ஒப்புதல்
ஆளுநர்;
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 5 பேர் கொண்ட துணைவேந்தர் பொறுப்புக் குழு நியமனத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தார். இந்தப் பல்கலைக்கழகத்தில் 2017 - 18 ஆம் ஆண்டில் 40 பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த நியமனத்தில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக எழுந்த புகாரின் பேரில், பதிவு செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அவர்களுக்கு தகுதி காண் பருவம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக முன்னாள் துணைவேந்தர் வி.திருவள்ளுவன் 2024, நவம்பர் மாதம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, நில அறிவியல் துறைப் பேராசிரியர் க.சங்கர் பொறுப்புத் துணைவேந்தராக நியமிக்கப்பட்டு, தொடர்ந்து பணியாற்றி வந்தார். இந்நிலையில், புதிய துணைவேந்தர் நியமிக்கப்படும் வரை பல்கலைக்கழகத்தை நிர்வாகம் செய்வது தொடர்பாக ஆட்சிக் குழுக் கூட்டம் சென்னையில் ஜனவரி 20 ஆம் தேதி நடைபெற்றது. இதில், துணைவேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினர்களாக தமிழ் வளர்ச்சித் துறைச் செயலர் வே.ராஜாராமன் (ஒருங்கிணைப்பவர்), ஆட்சிக் குழு உறுப்பினர்களான முனைவர் சி.அமுதா (மன்னர் சரபோஜி அரசு கல்லூரி தமிழ்த் துறை இணைப் பேராசிரியர்), முனைவர் வீ. அரசு (சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறை முன்னாள் தலைவர்), பெ.பாரதஜோதி (தமிழ்ப் பல்கலைக்கழக அறிவியல் புலத் தலைவர்), தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் அவ்வை ந.அருள் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இதற்கு ஒப்புதல் பெறுவதற்காக தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என். ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நியமனத்துக்கு ஆளுநர் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தார். இது குறித்து பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ) கோ.பன்னீர்செல்வம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழக ஆளுநர் ஒப்புதலின்படியும், தமிழ்ப் பல்கலைக்கழகச் சட்ட விதியின்படியும், தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்குப் புதிய துணைவேந்தர் நியமனம் செய்யப்படும் வரை, பல்கலைக்கழக நிர்வாகத்தைக் கவனித்து வர 5 உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். எனவே, தமிழ்ப் பல்கலைக்கழக நிர்வாகப் பணிகளை விரைவுபடுத்தும் வகையில் புதிய துணைவேந்தர் நியமனம் செய்யப்படும் வரை தமிழ்ப் பல்கலைக்கழக ஆட்சிக்குழுவினரால் ஒப்புதல் அளிக்கப்பட்ட 5 ஆட்சிக்குழு உறுப்பினர்கள் துணைவேந்தர் பொறுப்புக்குழு உறுப்பினர்களாகச் செயல்படுவர்" எனத் தெரிவித்துள்ளார்.