பேராவூரணி பேரூராட்சி ஊழல் முறைகேடு தொடர்பாக தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை 

விசாரணை;

Update: 2025-02-14 17:03 GMT
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி தலைவராக இருப்பவர் சாந்தி, இவரது கணவர் சேகர் திமுக நகரச் செயலாளராக உள்ளார். மாமனார் செல்வராஜ் திமுக முன்னாள் மாவட்ட துணைச் செயலாளராக உள்ளார்.  சாந்தி சேகர் பேராவூரணி பேரூராட்சி தலைவராக பொறுப்பேற்றது முதல் பல கோடி ரூபாய்க்கு, அப்போதைய பேரூராட்சி செயல் அலுவலர் பழனிவேல் என்பவர் ஒத்துழைப்புடன் பேரூராட்சி நிர்வாகத்தில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.  இது குறித்து பேராவூரணியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து சென்னை பேரூராட்சி இயக்குநர் அலுவலகத்தில் இருந்து உயர் அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்து ஊழல் முறைகேடு நடந்திருப்பதாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர்.  இது தொடர்பாக அரசு நிர்வாகம் ஆய்வு செய்து 6 வார காலத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. 3 மாதங்களை கடந்த நிலையில், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு கு முன்பு அதிமுக சார்பில் 5000 பேர் பங்கேற்ற பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய முன்னாள் அமைச்சர் காமராஜ் திமுக அரசு பேராவூரணி பேரூராட்சியில் நடைபெற்ற ஊழல் முறைகேடுகளை மூடி மறைப்பதாக குற்றம் சாட்டினார்.  இந்நிலையில் பேராவூரணி பொன்காடு பகுதியைச் சேர்ந்த நீலகண்டன் என்பவர் கடந்த புதன்கிழமை அன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் ஊழல் முறைகேடு தொடர்பாக இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என கேட்டு வழக்கறிஞர் மூலம் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.  இந்நிலையில் பிப்.13 வியாழக்கிழமையன்று தஞ்சாவூரில் இருந்து லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி அன்பரசன் தலைமையில் வந்த மூன்று பேர் கொண்ட குழு பொன்- காடு சென்று வழக்கு தொடர்ந்த நீலகண்டனிடம் சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து பேராவூரணி பேரூராட்சி அலுவலகத்தில் மதியம் சுமார் இரண்டரை மணி முதல் தற்போது வரை கோப்புகளை ஆய்வு செய்தனர்.  சாலைப் பணிகள் நடைபெறாமலேயே பணிகள் முடிந்ததாக, பேரூராட்சி தலைவரின் கணவர் பணம் பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அந்த இடங்களிலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதாக கூறப்படுகிறது.  பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவரோ, செயல் அலுவலரோ ஆய்வின் போது இல்லை. அங்குள்ள அலுவலர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தினர். இது பேராவூரணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News