உணவு பதப்படுத்துதலில் உலக அளவில் முன்னேற்றமடைய வேண்டும் : ஒன்றிய அமைச்சர் சிராக் பாஸ்வான் பேச்சு

பட்டமளிப்பு;

Update: 2025-02-14 17:22 GMT
உணவு பதப்படுத்துதலில் உலக அளவில் நாம் முன்னேற்றமடைய வேண்டும் என ஒன்றிய அரசின் உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் சிராக் பாஸ்வான் தெரிவித்தார்.  தஞ்சாவூர் தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் (நிப்டெம்) வியாழக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அவர் மேலும் பேசியது: இந்தியா மாபெரும் மாற்றத்தின் தருணத்தில் இருக்கிறது. நம் மக்கள்தொகையில் 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை 65 சதவீதம் உள்ளது. எனவே, நாம்தான் உலகின் மிக முக்கியமான இளைய பொருளாதார நாடாக உள்ளோம். உணவு பதப்படுத்துதல் தொழில் நம்முடைய பொருளாதாரத்துக்கு மட்டுமல்லாமல், உலகளாவிய விருப்பங்களையும் சார்ந்தது. உலகம் முழுவதும் சாப்பாட்டு மேஜையில் குறைந்தபட்சம் ஒரு உணவாவது இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை ஒரு இயக்கமாக நாம் எடுத்துச் செல்ல வேண்டும். உணவு உற்பத்தியில் உலக அளவில் நம் நாடு முன்னோடியாக இருந்தாலும், நாம் விளைவிக்கும் பொருட்களில் ஒரு பகுதி மட்டுமே பதப்படுத்தப்படுகிறது. உணவு பதப்படுத்துதல் மூலம் உற்பத்தியைப் பெருக்குவது மட்டுமல்லாமல், விரயமாவதைக் குறைத்தல், ஊட்டச்சத்தை மேம்படுத்துதல், அனைவருக்கும் மலிவு விலையை உறுதி செய்தல் ஆகிய பலன்களும் கிடைக்கின்றன. அதிகரித்து வரும் தேவைகளை உணர்ந்து ஒன்றிய அரசு உணவு பதப்படுத்துதல் துறையை மிகப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்து வருகிறது. இத்துறையில் திறமையான வல்லுநர்கள், மேம்பட்ட ஆய்வுகளுக்காக கூடுதலாக ஒரு நிப்டெம் நிறுவனம் அமைக்க ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உற்பத்தி தொடர்பான மானிய திட்டம், பிரதமரின் கிசான் சம்பதா யோஜனா போன்ற திட்டங்கள் மூலம் உணவு பதப்படுத்துதலில் வளர்ச்சியை ஏற்படுத்த வலுவான அடித்தளத்தை ஒன்றிய அரசு அமைத்து வருகிறது. என்றாலும், கொள்கைகள் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. துணிச்சலான யோசனைகளும், அச்சப்படாத செயல்பாடுகளும் தேவை. உணவு தொழில்நுட்பம், பதப்படுத்துதலில் மாணவர்கள் தங்களது நிபுணத்துவத்தைச் செயல்படுத்தி நடைமுறைப்படுத்த வேண்டும்.  செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துதல், சங்கிலி தொகுப்பு, தானியங்கி உள்ளிட்டவற்றின் மூலம் உணவு பதப்படுத்துதலை உயர்ந்த நிலைக்குக் கொண்டு சென்று இந்தியாவை உலக அளவில் முன்னோடியாகக் கொண்டு வர முடியும்" என்றார் அமைச்சர். நிப்டெம் நிர்வாகக் குழுத் தலைவர் ஆர்.எஸ்.சோதி சிறப்புரையாற்றினார். மேலும், இளநிலைப் பட்டப்படிப்பு முடித்த 60 பேருக்கும், முதுநிலைப் பட்டப்படிப்பு முடித்த 28 பேருக்கும், முனைவர் பட்டம் முடித்த 2 பேருக்கும் பட்டம் வழங்கப்பட்டது. முன்னதாக, நிப்டெம் இயக்குநர் வி. பழனிமுத்து வரவேற்றார். நிறைவாக, பதிவாளர் (பொ) எஸ். சண்முகசுந்தரம் நன்றி கூறினார். ஜாதிவாரி கணக்கெடுப்பு: பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறுகையில், ஜாதிவாரி கணக்கெடுப்பை நானும், எனது கட்சியும் (லோக் ஜனசக்தி கட்சி) ஆதரிக்கிறோம் என்றார் அவர்.

Similar News