அரசு பணி பெற்ற அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு பெற்றோர் ஆலோசனை கூட்டம்
குமாரபாளையம் அருகே அரசு பணி பெற்ற அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு விழா மற்றும் பெற்றோர் ஆலோசனை கூட்டம் நடந்தது.;
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள வேமன் காட்டு வலசு அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பெற்றோர்களுக்கான ஆலோசனை கூட்டமும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசுப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளியின் முன்னாள் மாணவிக்கு பாராட்டு விழாவும் நடந்தது. பள்ளியின் தலைமை ஆசிரியை செல்வி தலைமை வகித்தார். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் காந்தி நாச்சிமுத்து முன்னிலை வகித்தார். இப்பள்ளியில் 56 மாணவ மாணவிகள் பத்தாம் வகுப்பு பயின்று வருகின்றனர். இவர்களுக்கான பொதுத் தேர்வு வருகிற மார்ச் மாதம் 28ஆம் தேதி தொடங்க உள்ளது. இதுகுறித்து பெற்றோர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆசிரியர்கள் பேசுகையில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வின் அவசியம் குறித்தும் நாள்தோறும் எவ்வாறு திட்டமிட்டு படிக்க வேண்டும் பெற்றோர்கள் எவ்வகையில் மாணவர்களுக்கு உதவி செய்யலாம் என்பது குறித்தும் விளக்கிப் பேசினார்கள். இக்கூட்டத்தில் பெற்றோர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இப்பள்ளியில் பயின்று, சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் வணிகவரித்துறையில் பணியாளராக அரசு பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வினிதாவுக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. முன்னதாக அம்மாணவியின் தாயாருக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ஆசிரியை கீதா மாதேஸ்வரி நன்றி கூறினார். இதில் பத்தாம் வகுப்பு மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டு தங்கள் குழந்தைகளின் தேர்ச்சி குறித்து கேட்டறிந்தனர்.