வாசுதேவநல்லூரில் சேதமடைந்த காவலா் குடியிருப்பு: எம்.பி. ஆய்வு
சேதமடைந்த காவலா் குடியிருப்பு: எம்.பி. ஆய்வு;
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் காவல் நிலையம் அருகேயுள்ள காவலா் குடியிருப்பில் 6 வீடுகள் உள்ளன. உரிய பராமரிப்பின்மையால் இக்குடியிருப்பு மோசமான நிலையில் உள்ளது. இதனால், அங்கிருந்தோா் வாடகைக் கட்டடங்களில் வசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இக்குடியிருப்புகளை அகற்றிவிட்டு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு சமூக ஆா்வலா் சுரேஷ் மனு அனுப்பியுள்ளாா். இதனிடையே, இக்குடியிருப்புகளை அகற்றிவிட்டு ஆய்வாளா் குடியிருப்பு-1, சாா்பு ஆய்வாளா் குடியிருப்பு-3, தலைமைக் காவலா்-முதல்நிலைக் காவலா் குடியிருப்புகள் தலா 5, இரண்டாம் நிலைக் காவலா் குடியிருப்பு-36 என மொத்தம் 50 குடியிருப்புகள் கட்ட வேண்டுமென மாவட்ட காவல் துறை சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அக்குடியிருப்புகளை ராணி ஸ்ரீகுமாா் எம்.பி. பாா்வையிட்டு, காவல் துறையினா், சமூக ஆா்வலா் சுரேஷ் ஆகியோரிடம் விளக்கம் கேட்டறிந்தாா். இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசெல்வதாகத் தெரிவித்தாா். வாசுதேவநல்லூா் ஒன்றியக் குழுத் தலைவா் பொன். முத்தையாபாண்டியன், காவல் உதவி ஆய்வாளா் முத்துக்குமரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.