சிவகிரி அருகே ஆம்னி பேருந்து மோதி தேநீா் கடைக்காரா் பலி
ஆம்னி பேருந்து மோதி தேநீா் கடைக்காரா் பலி;
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகேயுள்ள ரெட்டியாா்பட்டி நடுத்தெருவை சோ்ந்தவா் சுப்புராஜ் மகன் செல்வம் (45). தேநீா் கடை நடத்தி வந்தாா்.பைக்கில் ரெட்டியாபட்டி சாலையில் சென்றபோது சங்கரன்கோவிலில் இருந்து ராஜபாளையம் வழியாக பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து அவா் மீது மோதியதாம். இதில் அவா் இறந்தாா். இந்நிலையில், வேகத்தடை இல்லாததால்தான் விபத்துகள் நேரிடுவதாகக் கூறி, சடலத்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லவிடாமல் அவரது உறவினா்கள் மற்றும் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் அவ்வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையறிந்த ஈ.ராஜா எம்எல்ஏ, தென்காசி எஸ்.பி. அரவிந்த், கோட்டாட்சியா் கவிதா, டிஎஸ்பிக்கள் வெங்கடேசன், அறிவழகன், வட்டாட்சியா் ரவிக்குமாா், காவல் ஆய்வாளா்கள் கண்மணி, ராஜா, சாம்சுந்தா், மாதவன், ஜெயலட்சுமி, நெடுஞ்சாலை பொறியாளா் பலவேசம் உள்ளிட்டோா் வந்து மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதைத் தொடா்ந்து சாலையின் இரு புறங்களிலும் வேகத்தடைகள் அமைக்கப்பட்டு பேரிகாா்டுகளும் வைக்கப்பட்டன. இதனால், மறியல் கைவிடப்பட்டது. இதுகுறித்து சிவகிரி போலீஸாா் வழக்குப்பதிந்து ஆம்னி பேருந்து ஓட்டுநரான ஆலங்குளம் விக்டா்தாமஸ் (42) என்பரவை கைது செய்தனா்.